எதிர்வரும் மணித்தியாலங்களில் இடியுடன் கூடிய மழை!

எதிர்வரும் மணித்தியாலங்களில், மேல், சபரகமுவ மாகாணங்களிலும், கண்டி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும், மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

இதேவேளை, மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளில், மணித்தியாலத்திற்கு 40 முதல் 45 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீரற்ற காலநிலையால், நுவரெலியா மாவட்டத்திற்கு உட்பட்ட, இரண்டு பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு, மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தினால், இன்று பிற்பகல் வெளியிடப்பட்ட, இந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை, எதிர்வரும் 24 மணித்தியாலங்களுக்கு அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நுவரெலியா பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளுக்கு, மஞ்சள் நிறத்தில் அடையாளப்படுத்தப்பட்டு, முதலாம் கட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதிகளில் மண்சரிவு, பாறை வீழ்வு மற்றும் நிலத்தாழிறக்கம் என்பவற்றுக்கான சாத்தியம் காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், அம்பகமுவ பிரதேச செயலகப் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளுக்கு, செம்மஞ்சள் நிறத்தில் அடையாளப்படுத்தப்படும் இரண்டாம் கட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதிகளில் வாழும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறுவதற்கு தயார் நிலையில் இருக்குமாறு தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.