எதிர்க்கட்சி பக்கத்தில் உள்ள ஆசனங்களில் முள்ளம்பன்றிகள் இருக்கின்றனவா? – அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார

போதைப்பொருள் விநியோக சங்கிலியை முற்றிலும் அழித்து, திட்டமிட்ட குற்றக்குழுவை ஒழிப்பதற்கான தேசிய பணி தொடங்கப்பட்டுள்ளதாக நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சி பக்கத்தில் உள்ள ஆசனங்களில் முள்ளம்பன்றிகள் இருக்கின்றனவா என்ற சந்தேகம் உள்ளது என குறிப்பிட்டார்.

எதிர்க்கட்சிகளின் ஆசனங்களில் முள்ளம்பன்றிகளை பார்க்கிறேன். திட்டமிட்ட குற்றக்குழுக்களை அடக்குகிறோம் என்று நாம் கூறும்போது, ​​அவர்கள் குதிப்பதை நான் காண்கிறேன்.

முன்னதாக பாதுகாப்பு நிலைமை குறித்து உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க “முடிந்தால் எங்களைக் கொல்லுங்கள் ஆவியாக வந்து பழி தீர்ப்போம்” என கூறியிருந்தார்.

அது குறித்த கருத்து தெரிவித்த அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார, சாமர சம்பத் தசநாயக்க ஆவியாக வந்து பயம் காட்ட வேண்டாம், அவரை இப்போது பார்க்கும் போது கூட, பயமாக இருக்கிறது என்று நகைச்சுவையாக கூறினார்.

தொடர்ந்தும் உரையாற்றி அமைச்சர் “போதைப்பொருள் விநியோக சங்கிலியை முற்றிலும் அழித்து, பாதாள உலகக் கும்பலை ஒழிப்பதற்கான தேசிய பணியை அரசாங்கம் தொடங்கியுள்ளது.

சட்டத்தை மதிக்கும் குடிமக்களுக்கு ஒரு வளமான நாட்டையும் அழகான வாழ்க்கையையும் நாங்கள் உருவாக்குகிறோம். ஆனால் குற்றக்குழுக்களுக்கு ஒரு நல்ல சிறைச்சாலையை நாங்கள் கட்டமைக்கிறோம்.

1977க்குப் பிறகு வந்த அரசாங்கங்கள் போதைப்பொருள் மற்றும் குற்றக்குழுக்களுடன் ஒத்துழைத்து செயற்பட்டன. தற்போதைய அரசாங்கம் அவ்வாறான செயலில் ஈடுபடாது என்றும் அவர் வலியுறுத்தினார்.

காவல்துறையின் பிடியில் ‘மதுஷ்’ மரணமடைந்தமை போன்ற சம்பவங்கள் தற்போதைய அரசாங்கத்தின் கீழ் நடக்கவில்லை என்றும், தவறிழைத்தவர்கள் விசாரிக்கப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என்றும் கூறினார்.

அத்துடன், சர்வதேசக் கடலில் போதைப்பொருட்களுடன் பிடிபடும் வெளிநாட்டினரையும் இலங்கையில் விசாரித்துக் குற்றவாளிகளாக்க ஒரு புதிய சட்டத் திருத்தம் கொண்டு வரப்படும் என்று அறிவித்தார்.

தேசிய போதைப்பொருள் எதிர்ப்புத் திட்டம் எதிர்வரும் 30ஆம் திகதியன்று தொடங்குகிறது.

இது அரசியலுக்கு அப்பாற்பட்ட தேசியப் பணி என்றும், எதிர்க்கட்சியினர் உட்பட அனைவரும் இந்த முயற்சிக்கு ஆதரவு தர வேண்டும் என்றும் அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார வேண்டுகோள் விடுத்தார்.