எடை குறைத்தால் சொகுசு கார் பரிசு

சீனாவில் உள்ள உடற்பயிற்சிக் கூடம் ஒன்றில் மூன்று மாதங்களுக்குள் 50 கிலோ எடையைக் குறைக்கும் நபருக்கு சொகுசு சிற்றூர்ந்து ஒன்று பரிசளிக்கப்படும் என்ற சவாலை அறிவித்துள்ளமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஷான்டாங் மாகாணத்தின் பின்ஜோவில் உள்ள இந்த உடற்பயிற்சிக் கூடம், வெற்றியாளருக்கு ஒரு போர்ஷே பனமேரா (Porsche Panamera) சிற்றூர்ந்தை பரிசாக வழங்குவதாகக் கூறியுள்ளது.

இந்த விளம்பரம் இணையத்தில் கவனத்தை ஈர்த்துள்ள நிலையில், குறுகிய காலத்தில் இவ்வளவு தீவிர எடை குறைப்பு என்பது ஆபத்து என சுகாதார நிபுணர்கள் கவலைகளை வெளிப்படுத்தியுள்ளனர்.

ஒரு நாளைக்கு 0.5 கிலோ எடை இழப்பு என்பது மிக வேகமாக உள்ளது என்றும், இது கொழுப்பை விட தசை இழப்புக்கு வழிவகுக்கும் என்றும் குடலிறக்க அறுவை சிகிச்சை நிபுணர்கள் தெரிவித்தனர்.

வாரத்திற்கு சுமார் 0.5 கிலோ எடையைக் குறைப்பதே பாதுகாப்பான இலக்கு எனவும் அவர்கள் பரிந்துரைத்துள்ளார்.

அதோடு தசை இழப்பால் பெண்களுக்கு ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள், முடி உதிர்தல் மற்றும் ஒழுங்கற்ற மாதவிடாய் போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சுமார் 30 பேரை இலக்காகக் கொண்டு இந்த சவால் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இதுவரை ஏழு முதல் எட்டு பேர் இதற்காகப் பதிவு செய்துள்ளதாகக் கூறப்படுகின்றது.

அதேவேளை இந்த அதிவேக எடை குறைப்பு சவாலின் பயிற்சி முறை மற்றும் உணவுத் திட்டம் பற்றிய விவரங்களை உடற்பயிற்சிக் கூடம் வெளியிடவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.