
எச்சரிக்கையை மீறி கடவையை கடக்க முயன்ற பாரவூர்தி – ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் பலி!
வெலிகம பொல்லத்துமோதர ரயில் கடவையில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் உயிரிழந்தனர்.
மாத்தறையில் இருந்து காலி நோக்கிப் பயணித்த ரயிலுடன் சிறியரக பாரவூர்தி மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.
விபத்தில் காயமடைந்த ஐவர் மாத்தறை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அதில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
தெலிஜ்ஜவில கிரிமெட்டிமுல்ல பிரதேசத்தில் வசிக்கும் குறித்த நபர்கள், காலி பிரதேசத்தில் உள்ள உறவினர் வீட்டிற்குச் சென்று வீடு திரும்பும் போதே விபத்துக்குள்ளாகியுள்ளனர்.
எச்சரிக்கை சமிக்ஞைகள் ஒளிரும் வேளையில், அருகிலிருந்தவர்களின் எச்சரிக்கையினையும் மீறிப் பாரவூர்தி ரயில் கடவை ஊடாக பயணிக்க முற்பட்ட போதே இந்த விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வெலிகம பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
