
ஊவா மாகாணத்திலும் டிஜிட்டல் பஸ் கட்டண முறை அறிமுகம்
அரசாங்கத்தின் டிஜிட்டல் மயமாக்கல் திட்டங்களின் கீழ், வங்கி அட்டைகள் மூலம் பஸ் கட்டணங்களை செலுத்தும் முறை ஊவா மாகாணத்திலும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதன் ஆரம்ப நிகழ்வு நேற்று வெள்ளிக்கிழமை பதுளையிலுள்ள ஊவா மாகாண கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில், ஊவா மாகாண பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையுடன் தொடர்புடைய அனைத்து பஸ் உரிமையாளர்கள் மற்றும் வங்கி பிரதிநிதிகளுக்கும் வங்கி அட்டைகள் மூலம் டிஜிட்டல் கொடுப்பனவுகளைப் பெறும் வசதி மற்றும் நன்மைகள் குறித்து விழிப்புணர்வு வழங்கப்பட்டதாக டிஜிட்டல் பொருளாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
ஊவா மாகாண பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையைச் சேர்ந்த அனைத்து பஸ்களுக்கும் டிஜிட்டல் கட்டண வசதியை சில மாதங்களுக்குள் வழங்க பஸ் உரிமையாளர்கள் இதன்போது ஒப்புக்கொண்டுள்ளனர்.
டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் ஆலோசகர் சுமுது ரத்னாயக்க உள்ளிட்ட அதிகாரிகள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.
