மட்டக்களப்பில் ஊடக தேசிய கொள்கை உருவாக்குதல் தொடர்பாக விசேட கலந்துரையாடல்

ஊடகத்துறைக்கான தேசிய கொள்கையொன்றை உருவாக்குவது தொடர்பான விசேட கலந்துரையாடலொன்று மட்டக்களப்பில் வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.

ஜனாதிபதி செயலகத்தின் மேலதிக செயலாளர் லோசினி பீரீஸ் தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடலில், வெகுஜன ஊடக அமைச்சின் அபிவிருத்திப் பிரிவுப் பணிப்பாளர் டபிள்யூ பீ. செவ்வந்தி, கிழக்கு பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாக மொழி மற்றும் தொடர்பாடல் கற்கைகள் துறைத்தலைவர் கலாநிதி வி.ஜே.நவீன்ராஜ், கிழக்கு பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் சிவபிரியா ஸ்ரீராம் ஊடக அமைச்சின் பணிப்பாளர் (அபிவிருத்தி) டபிள்யூ.பீ.செவ்வந்தி, சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளரும் இலங்கை பத்திரிகை பேரவையின் தலைவருமாகிய மஹிந்த பத்திரன, ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தித் திட்டத்தின் (UNDP) ஊடகம்சார் விசேட நிபுணர் சதுரங்க அப்புவாராச்சி, ஊடக அமைச்சின் அபிவிருத்தி அதிகாரிகளான சேதி அமரஜீவ, ஆர். மல்ஸா ஜயவர்தன மட்டக்களப்பு மாவட்ட செயலக ஊடகப்பிரிவின் பொறுப்பதிகாரி வ. ஜீவானந்தன். உட்பட மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மாவட்டங்களின் ஊடகவியலாளர்களும் இன்னும் பல அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

நிகழ்வை ஆரம்பித்து வைத்து கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி செயலகத்தின் மேலதிக செயலாளர் லோசினி பீரீஸ், தற்போதைய அரசாங்கத்தின் கொள்கைகள் மற்றும் முன்னுரிமைகளுக்கு இணங்க, வெகுசன ஊடக அமைச்சு, ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தித் திட்டத்துடன் (UNDP) இணைந்து இலங்கையில் தேசிய ஊடகக் கொள்கைக்கான கட்டமைப்பொன்றை உருவாக்கும் பணியிலும் இலங்கை ஊடகத்துறைக்கான கொள்கை சட்டமொன்றை அமைப்பதிலும் ஈடுபட்டுவருகின்றது.

அதற்கமைய, வெகுசன ஊடக அமைச்சினால் கல்வியாளர்கள் மற்றும் ஊடகத்துறையில் நிபுணத்துவம் பெற்றவர்களை உள்ளடக்கி வழிநடத்தல் குழுவொன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

இந்தக் குழு பல சந்தர்ப்பங்களில் கூடி விசேட குழுக் கலந்துரையாடல்கள் மூலம் தேசிய ஊடகக் கொள்கையை உருவாக்கும் செயல்முறையில் அனைத்து பங்குதாரர்கள் மற்றும் ஆர்வமுள்ள தரப்பினரிடமிருந்து கருத்துக்களைப் பெற்றுக்கொள்ள முடிவு செய்துள்ளது. இந்தத் தேசிய கொள்கை நாடாளாவிய ரீதியில் ஊடகத்துறை சார்ந்தோரிடமிருந்து கருத்துப் பெறப்பட்டு அதன் இறுதி வரைவு டிசெம்பெர் மாதம் தயார் செய்யப்பட்டு விடும்” என்று தெரிவித்தார்.

வெகுசன ஊடகக் கொள்கை என்பதன் மூலம் தாங்கள் கருதுவது என்ன? கொள்கைத் திட்டமொன்றை விதிப்பதன் மூலம் ஊடக சுதந்திரத்திற்கு மட்டுப்பாடுகள் அல்லது தடைகள் ஏற்படுமென தாங்கள் கருதுகிறீர்களா? கொள்கையைத் தயாரித்த பின்னர் அதன் ஏற்புடமை மற்றும் செயற்படுத்தலை எவ்வாறு நடைமுறைப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட விடயங்களில் ஊடகவியலாளர்களிடமிருந்து கருத்துக்கள் பெறப்பட்டன.

ஊடக தேசிய கொள்கை உருவாக்குதல்  தொடர்பாக மட்டக்களப்பில் விசேட கலந்துரையாடல்

ஊடக தேசிய கொள்கை உருவாக்குதல்  தொடர்பாக மட்டக்களப்பில் விசேட கலந்துரையாடல்