ஊடகங்களில் வெளியான போலி செய்தி: பொலிஸாரின் அறிவிப்பு

பேருந்து சாரதிகள் ஆசனப்பட்டி அணிவதை கட்டாயமாக்கும் புதிய சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக ஊடகங்களில் வெளியான செய்திகளை இலங்கை பொலிஸார் மறுத்துள்ளனர்.

இது தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்ட பொலிஸ் பிரிவு, அத்தகைய புதிய விதிமுறை எதுவும் நடைமுறைபடுத்தப்படவில்லை என்றும், சீட் பெல்ட் அணிவது 2011 முதல் நடைமுறையில் உள்ளது என்றும் தெளிவுபடுத்தியுள்ளது.

அறிக்கையின்படி, பொதுப் போக்குவரத்து மற்றும் பிற வாகன சாரதிகள் ஆசனப்பட்டி அணிவது ஒகஸ்ட் 9  2011 அன்று வெளியிடப்பட்ட அதிவிஷேட வர்த்தமானி எண் 1718/12 இன் கீழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

சில ஊடகங்கள் புதிய சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டதாக பொய்யாகக் கூறி, நீண்ட நேரம் ஆசனப்பட்டி அணிவதால் ஏற்படக்கூடிய உடல்நல அபாயங்கள் குறித்து கவலைகளை எழுப்பியுள்ளதாக பொலிஸ் துறையினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதன்படி, தற்போதுள்ள ஆசனப்பட்டி சட்டம் மற்றும் பிற போக்குவரத்து விதிமுறைகளை ஒழுக்கமான மற்றும் சட்டத்தை மதிக்கும் வகையில் பின்பற்றுமாறு சாரதிகளை பொலிஸ் தலைமையகம் வலியுறுத்தியுள்ளது.

மேலும் பொதுமக்களை தவறாக வழிநடத்தக்கூடிய தவறான தகவல்களைப் பரப்புவதைத் தவிர்க்குமாறும் பொலிஸ்துறையினர் ஊடக நிறுவனங்களை கேட்டுக் கொண்டுள்ளது.