உள்ளூராட்சி சபை ஊழியர்கள் மற்றும் உறுப்பினர்களுக்கு கற்கைநெறிகள்

-கல்முனை நிருபர்-

இலங்கை உள்ளுராட்சி மன்ற நிறுவனமும், இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகமும் இணைந்து அம்பாறை மாவட்டத்தில் உள்ள உள்ளூராட்சி சபைகளின் ஊழியர்கள் மற்றும் உறுப்பினர்களுக்கு, அத்தியாவசியமான சான்றிதழ் கற்கைநெறிகளை எதிர்வரும் காலங்களில் முன்னெடுக்கப்பட வேண்டும் என தென்கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூபக்கர் தெரிவித்தார்.

இலங்கை உள்ளுராட்சி மன்ற நிறுவனத்தின் நிறைவேற்று குழு உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் நேற்று புதன்கிழமை  இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்துக்கு விஜயம் செய்து, உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூபக்கர் மற்றும் அபிவிருத்தி நிலையத்தின் பணிப்பாளர் பேராசிரியர் ஜாஃபர் ஆதம்பாவா ஆகியோருடன் இது தொடர்பாக கலந்துரையாடிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

உபவேந்தர் மேலும் இங்கு கருத்து தெரிவிக்கையில்,

சமூக மாற்றத்தை எதிர்கொள்ளும் புத்திஜீவிகளை கல்வியினூடாக உருவாக்க வேண்டுமென்றும், தற்கால நவீன சவால்களை எதிர்நோக்க கூடிய வினைத்திறன் மிக்க வேலைகளை வழங்க வேண்டுமென்றும், பல்கலைக்கழகத்தை சமூகங்களில் தொடர்புபடுத்தல் வேலைத்திட்டத்தின் கீழ் துறைசார்ந்த இவ்வாறான பயிற்சி பட்டறைகள், கருத்தரங்குகள், வழிகாட்டல்கள், ஆலோசனைகள் போன்றவை சம காலத்தில் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூபக்கருடைய எண்ணக் கருவில் உருவான, பல்கலைக்கழக கல்வி சமூகத்துடன் உரையாடல், என்ற நிகழ்ச்சி பேராசிரியர் றமீஸ் அபூபக்கர் தலைமையில் செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.