ஹங்கேரியின் புடாபெஸ்டில் நடைபெற்ற முதலாவது World Athletics Ultimate Championship தொடரின் ஆடவருக்கான ஈட்டி எறிதல் போட்டியில் இலங்கையின் ருமேஷ் தரங்க பதிரகே தங்கப் பதக்கத்தை வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளார். 23 வயதான ருமேஷ், போட்டியின் இறுதி முயற்சியில் 91.09 மீற்றர் தூரத்திற்கு ஈட்டியை எறிந்து முதலிடத்தை உறுதி செய்தார்.
போட்டியின் மூன்றாவது சுற்றில் 87.11 மீற்றர் தூரத்தை எறிந்து முன்னிலை பெற்ற ருமேஷ், இறுதி சுற்றில் தனது சிறந்த முயற்சியை வெளிப்படுத்தி 91.09 மீற்றர் தூரத்தைப் பதிவு செய்தார். இதன் மூலம் போட்டியில் பங்கேற்ற உலகின் முன்னணி ஈட்டி எறிதல் வீரர்களை அவர் பின்னுக்குத் தள்ளினார். இரண்டு முறை உலக சம்பியனான கிரெனடாவின் ஆண்டர்சன் பீட்டர்ஸ் 86.18 மீற்றருடன் வெள்ளிப் பதக்கத்தையும், ஜேர்மனியின் ஜூலியன் வெபர் 85.89 மீற்றருடன் வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர்.
இந்த வெற்றி ருமேஷின் 2026ஆம் ஆண்டின் அபாரமான தொடர்ச்சியான வெற்றிப் பயணத்தில் மற்றுமொரு முக்கிய அத்தியாயமாக அமைந்துள்ளது. இந்த ஆண்டில் அவர் ஏற்கனவே பொதுநலவாய விளையாட்டுப் போட்டியில் ஆடவர் ஈட்டி எறிதலில் இலங்கைக்கான தங்கப் பதக்கத்தை வென்றிருந்தார். அத்துடன் டயமண்ட் லீக் (Diamond League) போட்டிகளிலும் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு, உலகின் முன்னணி ஈட்டி எறிதல் வீரராக தன்னை நிலைநிறுத்தியுள்ளார்.
குறிப்பாக, 2026ஆம் ஆண்டில் ருமேஷின் தனிப்பட்ட சிறந்த சாதனை 92.62 மீற்றர் ஆகும். ஜூன் மாதம் ரோம் நகரில் நடைபெற்ற Diamond League போட்டியில் அவர் இந்த தூரத்தைப் பதிவு செய்தார். World Athletics தரவரிசையின்படி, தற்போது ஆடவர் ஈட்டி எறிதலில் ருமேஷ் உலகின் முதலிட வீரராக உள்ளார்.
வேர்ல்ட் அத்லெடிக்ஸ் அல்டிமேட் சேம்பியன்ஷிப்(World Athletics Ultimate Championship) போட்டியில் உலகின் முன்னணி வீரர்கள் பலர் கலந்து கொண்ட நிலையில், ருமேஷின் வெற்றி மேலும் முக்கியத்துவம் பெற்றுள்ளது. ஒலிம்பிக் மற்றும் உலக சம்பியன்ஷிப் பதக்கம் வென்ற வீரர்களை எதிர்கொண்ட நிலையிலும் அவர் தனது இறுதி முயற்சியில் 90 மீற்றர் எல்லையைத் தாண்டி வெற்றியை உறுதி செய்துள்ளார். இந்தப் போட்டி முதன்முறையாக நடத்தப்பட்டதுடன், உலகின் முன்னணி மெய்வல்லுனர்களை ஒரே மேடையில் இணைக்கும் புதிய வடிவிலான சர்வதேச போட்டியாகவும் அமைந்துள்ளது.
ருமேஷின் இந்த வெற்றியின் மூலம், சர்வதேச மெய்வல்லுனர் அரங்கில் இலங்கையின் ஈட்டி எறிதல் பிரிவுக்கு புதிய உயரம் கிடைத்துள்ளது. குறிப்பாக, பொதுநலவாய விளையாட்டுப் போட்டி தங்கம், டயமண்ட் லீக் (Diamond League) வெற்றிகள் மற்றும் தற்போது வேர்ல்ட் அத்லெடிக்ஸ் அல்டிமேட் சேம்பியன்ஷிப்(World Athletics Ultimate Championship) தங்கம் என, ஒரே ஆண்டில் தொடர்ச்சியாக உயர்மட்ட வெற்றிகளைப் பதிவு செய்துள்ள ருமேஷ், உலகின் முன்னணி ஈட்டி எறிதல் வீரர்களில் ஒருவராக மட்டுமன்றி, இலங்கையின் புதிய மெய்வல்லுனர் நட்சத்திரமாகவும் உருவெடுத்துள்ளார்.










