செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் அபாயங்களை கட்டுப்படுத்த உலகளாவிய ஒழுங்குமுறைகள் மற்றும் பாதுகாப்புத் தரநிலைகள் அவசியம் என OpenAI மற்றும் Anthropic நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகள் ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் வலியுறுத்தியுள்ளனர். ஐ.நா. பொதுச் சபை கூட்டத்தொடருக்கு மத்தியில் நியூயோர்க்கில் நடைபெற்ற AI தொடர்பான பாதுகாப்புச் சபை அமர்வில் OpenAI தலைமை நிர்வாக அதிகாரி சாம் ஆல்ட்மன் மற்றும் Anthropic தலைமை நிர்வாக அதிகாரி டாரியோ அமோடை ஆகியோர் உரையாற்றினர்.
AI தொழில்நுட்பம் தவறாக நிர்வகிக்கப்பட்டால் மனிதகுலத்துக்கே அச்சுறுத்தலாக மாறக்கூடும் என டாரியோ அமோடை எச்சரித்துள்ளார். அதேவேளை, AI-யின் எதிர்காலத்தை எந்தவொரு தனி நிறுவனமோ அல்லது நாடோ கட்டுப்படுத்தக்கூடாது என சாம் ஆல்ட்மன் தெரிவித்துள்ளார். AI மாதிரிகளை பரிசோதிப்பதற்கான பொதுவான சர்வதேச பாதுகாப்புத் தரநிலைகள் மற்றும் சம்பவங்களை விரைவாகப் பகிர்ந்து கொள்வதற்கான சர்வதேச நடைமுறைகள் உருவாக்கப்பட வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
AI தொடர்பான உலகளாவிய ஒத்துழைப்புக்கான இந்த அழைப்புகளுக்கு மத்தியில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம் சர்வதேச அமைப்புகள் மூலம் AI மீது மையப்படுத்தப்பட்ட உலகளாவிய கட்டுப்பாடுகளை விதிக்கும் முயற்சிகளை நிராகரித்துள்ளது. இதனால், AI தொழில்நுட்பத்தின் விரைவான வளர்ச்சிக்கும் அதன் பாதுகாப்பு மற்றும் ஒழுங்குமுறைக்கும் இடையிலான சமநிலை தொடர்பான சர்வதேச விவாதம் மேலும் தீவிரமடைந்துள்ளது.










