உலகக்கிண்ணப் போட்டிக்கு தயாராகும் இலங்கை அணி
ஐசிசி ஆண்கள் இருபதுக்கு – 20 (T20) உலகக்கிண்ணப் போட்டித் தொடர் ஆரம்பமாகவுள்ள நிலையில், இலங்கை கிரிக்கெட் வீரர்களை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க இன்று வியாழக்கிழமை நேரில் சந்தித்து கலந்துரையாடினார்.
NCC மைதானத்தில் இன்று நடைபெற்ற கிரிக்கெட் அணியினரின் பயிற்சி அமர்வுகளைத் தொடர்ந்து இந்தச் சந்திப்பு இடம்பெற்றது. இதன்போது வீரர்களின் தன்னம்பிக்கையை அதிகரிக்கும் நோக்கில் ஜனாதிபதி அவர்களுடன் உரையாடியதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கை கிரிக்கெட் அணி அண்மைக்காலமாகத் தொடர்ச்சியான தோல்விகளைச் சந்தித்து வருவதுடன், ரசிகர்களின் கடும் விமர்சனங்களுக்கும் உள்ளாகி வருகின்றது. இவ்வாறானதொரு இக்கட்டான சூழ்நிலையில், சொந்த மண்ணில் நடைபெறவுள்ள உலகக்கிண்ணத் தொடரை எதிர்கொள்வது அணிக்கு பெரும் சவாலாகவும் அழுத்தமாகவும் அமைந்துள்ளது.
எதிர்வரும் பெப்ரவரி 8ஆம் திகதி இலங்கை அணி தனது முதல் போட்டியில் களமிறங்கவுள்ளது. இப்போட்டிக்கு முன்னதாக வீரர்களை நேரில் சந்தித்த ஜனாதிபதி, அவர்களுக்குத் தேவையான தைரியத்தையும் ஆலோசனைகளையும் வழங்கியதுடன், தொடருக்கான தனது வாழ்த்துக்களையும் பகிர்ந்துகொண்டார்.
