உறவினர்களை சந்திக்க லண்டனிலிருந்து நாட்டுக்கு வந்தவர் உயிரிழப்பு!

-யாழ் நிருபர்-

யாழ்ப்பாணத்தில் உள்ள உறவினர்களை சந்திப்பதற்காக லண்டனில் இருந்து வருகை தந்தவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.

கணேசராசா தியாகராசா (வயது 56) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் யாழ்ப்பாணத்தில் உள்ள உறவுகளை சந்திப்பதற்காக லண்டனில் இருந்து கொழும்பிற்கு வந்து, கடந்த 16 ஆம் திகதி இரவு கொழும்பிலிருந்து பேருந்து மூலம் யாழ்ப்பாணம் நோக்கி பயணித்துக் கொண்டிருந்தார்.

யாழ்ப்பாணம் வருகை தந்த பின்னரும் குறித்த நபர் பேருந்திலிருந்து இறங்கவில்லை, இதன் போது நடத்துனர் அவரை எழுப்ப முற்படுகையில் அவர் மயக்க நிலையில் காணப்பட்டார்.

இந்நிலையில், பேருந்தில் இருந்தவர்கள் அவரை 17ஆம் திகதி காலை யாழ்ப்பாணம் போதனா வைத்திசாலையில் சேர்ப்பித்தனர், இருப்பினும் சிகிச்சை பலனின்றி அவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை உயிரிழந்துள்ளார்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.

உடற்கூறு பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.