உருலவள்ளி தோட்ட காளியம்மன் ஆலயத்தில் புகுந்த சிறுத்தை – காட்டுக்குள் விடுவிப்பு

-ஹட்டன் நிருபர்-

அக்கரபத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெல்மொரல் தோட்டம் கிரேன்லி கீழ் பிரிவில்(உருலவல்லி தோட்டம்) சிறுத்தை குட்டியொன்று உயிருடன் நுவரெலியா வண விலங்கு அதிகாரி ஒருவரால் செவ்வாய்க்கிழமை பகல் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த சிறுத்தை குட்டி சுமார் இரண்டு அடி நீளமும் ஒன்றரை அடி உயரமாகும் இந்த காளியம்மன் ஆலய கதவு திறந்திருந்த போது இது உள் நுழைந்திருக்கலாம் என மக்கள் சந்தேகிக்கின்றளர்.

ஆலயத்துக்கு அருகாமையில் தொடர்குடியிருப்பில் வசிக்கும் பெண் ஒருவருக்கு ஆலயத்தில் சிறுத்தை உறுமும் சத்தத்தினை கேட்டு ஆலயத்துக்கு சென்று பார்த்துள்ளார்.

சிறுத்தையை கண்ட பெண் அயலவர்களுக்கு தகவல் தெரிவித்ததையடுத்து பிரதேச வாசிகள் ஆலயத்திற்கு சிறுத்தையை பார்வையிட்டதோடு ஆலய கதவினையும் மூடி பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

அதனை தொடர்ந்து பொலிஸார் நுவரெலியா வனவிலங்கு காரியாலயத்திற்கு தகவல் வழங்கியதனையடுத்து குறித்த அதிகாரி சம்பவ இடத்திற்கு வருகை தந்து கதவினை திறந்து சிறுத்தையை மீட்டு வன பகுதிக்கு செல்ல ஏற்பாடு செய்ததுடன் இந்த சிறுத்தை இனம் மீன்பிடி சிறுத்தை இனம் என்றும் இவை ஆபத்தானவை அல்ல எனவும் ஏனைய சிறுத்தைகள் தொடர்பாக அவதானமாக இருக்குமாறு ஆலோசனை தெரிவித்ததுடன் பொது மக்களுக்கு சிறுத்தைகள் தொடர்பான துண்டு பிரசுரங்களும் வழங்கப்பட்டன.

எது எவ்வாறான போதிலும் குறித்த பிரதேசத்தில் சிறுத்தைகள் அடிக்கடி நடமாடுவதாகவும் தங்களுடைய வளர்ப்பு நாய்களை கொண்டு செல்வதாகவும் இரவு நேரங்களில் வெளியில் செல்வதற்கு மிகவும் பயமாக இருப்பதாகவும் சிறுவர்களை வீடுகளில் விட்டுச்செல்வதில் பயமாக இருப்பதாகவும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
எனவே இது குறித்து உரியவர்கள் சரியான தீர்வினை பெற்றுக்கொடுக்கப்பட வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.