
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுடன் தொடர்புடைய புலஸ்தினி மகேந்திரன் உயிருடன் இருக்கிறாரா?
2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுடன் தொடர்புடைய புலஸ்தினி மகேந்திரன் (சாரா ஜெஸ்மின்) உயிருடன் இருக்க வாய்ப்புள்ளதாக விசாரணைகளின் மூலம் தகவல்கள் கிடைத்துள்ளதாகப் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
சாரா ஜெஸ்மின் இறந்துவிட்டதாகக் கூறப்பட்ட போதிலும், அவர் உயிருடன் இருப்பதாகவே விசாரணைகள் உணர்த்துகின்றன.
எனினும், அவர் தற்போது இந்தியாவில் தங்கியிருப்பதாக எந்தவித ஆதாரங்களும் கிடைக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தேவைப்பட்டால், அவரை கைது செய்வதற்கான சர்வதேச பிடியாணையைப் பெறுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என கூறினார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்குப் பின்னால் ஏதேனும் சதித்திட்டம் (Conspiracy) இருந்ததா என்பது குறித்து புதிய அரசாங்கம் ஆழமான விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றது.
விசாரணைகளுக்குப் பாதிப்பு ஏற்படும் என்பதால், சில முக்கிய விபரங்களை தற்போது நாடாளுமன்றத்தில் பகிரங்கப்படுத்த முடியாது என அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.
