
உயிருக்கு ஆபத்து : நித்யானந்தா இலங்கை அரசிடம் மருத்துவ தஞ்சம் கோருகிறார் ?
இந்தியாவில் தேடப்படும் பாலியல் குற்றவாளி நித்யானந்தா, தனது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும், இலங்கையில் மருத்துவ ரீதியில் உதவி தஞ்சம் கோரி இலங்கை அதிபருக்கு கடிதம் எழுதியுள்ளதாக, “இந்தியடுடே” செய்தி வெளியிட்டுள்ளது.
பாலியல் வழக்கில் தேடப்பட்டு வந்த நித்யானந்தா, 2018இல் இந்தியாவில் இருந்து தப்பியோடி, கைலாச தீவில் தஞ்சம் புகுந்துள்ளதாக கூறப்படும் நிலையில், இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்காவுக்கு அவரது தரப்பில் இருந்து கடிதம் எழுதப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தான் வசிக்கும் கைலாச தீவில் போதிய மருத்துவ வசதிகள் இல்லை எனவும், இலங்கை அரசு மருத்துவ வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ள நிலையில் , இக்கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.
நித்தியானந்தாவின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும், அவருக்கு அவசர மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கைலாச தீவுக்கான மாநில அமைச்சர் என்று குறிப்பிடப்படும் நித்தியானந்தா ஜனாதிபதிக்கு எழுதிய இந்தக் கடிதத்தில், தனக்கு என்ன பிரச்சனை என்று கைலாசத்தில் உள்ள மருத்துவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை என்றும், கைலாசத்தில் மருத்துவ வசதிகள் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
தனது உடல்நிலையை கருத்தில் கொண்டு தனக்கு மருத்துவ புகலிடம் வழங்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
மருத்துவ சிகிச்சைக்கான முழு செலவையும் கைலாஷ் அரசு ஏற்கும் என்றும், இலங்கையுடன் அரசியலமைப்பு ரீதியான உறவை ஏற்படுத்த விரும்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தனது கோரிக்கைக்கு இணங்கினால் இதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இலட்சக்கணக்கான டொலர் பெறுமதியான மருத்துவ உபகரணங்களை இலங்கைக்கு வழங்கவுள்ளதாகவும் இச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

