உயிருக்கு அச்சுறுத்தல்கள் இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் விதான கவலை

ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் விதான இன்று நாடாளுமன்றத்தில் கொலைத் திட்டங்கள் மற்றும் அவரது உயிருக்கு அச்சுறுத்தல்கள் இருப்பதாகக் கூறப்படுவது குறித்து கவலை தெரிவித்தார்.

இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர், இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்துமாறு களுத்துறை பிரதி பொலிஸ் மா அதிபருக்கு, பொலிஸ் மா அதிபர் அறிவித்துள்ளதாகக் தெரிவித்தார்.

“வாகனத்தில் இருந்து இறங்கும்போது என்னை படுகொலை செய்ய திட்டமிட்டுள்ளதாக கடிதம் மூலம் பிரதி பொலிஸ் மா அதிபருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபரின் பெயரும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. நான் சுட்டுக் கொல்லப்படுவேன் என்று அதில் கூறப்பட்டுள்ளது,” என்று அவர் கூறினார்.

இந்த விவகாரம் குறித்து விசாரிக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் விதான மேலும் நாடாளுமன்றத்தையும், அரசாங்கத்தையும் கேட்டுக்கொண்டார்.

அவரது முறையீட்டிற்கு பதிலளித்த பிரதி சபாநாயகர், இந்த விடயம் சபாநாயகரின் கவனத்திற்குக் கொண்டுசெல்லப்படும் என்றும், சபாநாயகரிடம் தனது கோரிக்கையை எழுத்துப்பூர்வமாக முன்வைக்குமாறும் நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் விதானவிடம் தெரிவித்தார்.