உணவு வேளையில் வீட்டுக்கு சென்ற இ.போ.ச பேருந்தின் நடத்துனர் விபத்தில் உயிரிழப்பு!

-யாழ் நிருபர்-

யாழ்ப்பாணத்தில் உணவருந்த வீட்டுக்கு சென்ற நபர் ஒருவர் வாகனம் மோதி நேற்று சனிக்கிழமை உயிரிழந்தார்.

நயினாதீவு 8ஆம் வட்டாரத்தை சேர்ந்த கிறிஸ்தோத்திரம் பாலேஸ்வரன் (வயது 44) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் கோண்டாவில் டிப்போவில் பேருந்து நடத்துனராக பணிபுரிந்து வருகின்றார். நயினாதீவு பகுதியைச் சேர்ந்த இவர் கோண்டாவில் பகுதியில், பணி நிமித்தம் வாடகை வீட்டில் வசித்து வருகின்றார்.

இந்நிலையில் மதிய உணவுக்காக துவிச்சக்கர வண்டியில் கோண்டாவில் பகுதியில் உள்ள வீடு நோக்கி சென்றுகொண்டு இருந்தார். கோண்டாவில் அம்மாச்சி உணவகத்துக்கு அருகாமையில் வீதியை கடக்க முற்பட்டவேளை வீதியால் வந்த வான் அவர் மீது மோதியதில் உயிரிழந்துள்ளார்.

இதேவேளை, இவரது இரு பிள்ளைகள் பேராதனை மற்றும் ஶ்ரீஜெயவர்த்தனபுரப் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்றுவரும் நிலையில், இளைய மகள் அண்மையில் வெளியான கல்விப் பொதுத் தராதர சாதாரணதரப் பரீட்சையில் 9ஏ பெறுபேறுகளைப் பெற்றிருந்தார் என தெரிய வருகின்றது.

சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.

உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.