உணவு ஒவ்வாமையினால் 25 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி!
பொலன்னறுவை பகுதியில் இருந்து நுவரெலியாவிற்கு கல்வி சுற்றுலா நிமிர்த்தம் வருகை தந்த பாடசாலை மாணவர்கள் உணவு ஒவ்வாமையினால் பாதிக்கப்பட்டு 25 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
உணவு ஒவ்வாமையினால் நேற்று பிற்பகல் மாணவர்களுக்கு வாந்தி , வயிற்றுவலி , வயிற்றுப்போக்கு , தலைசுற்று, சுவாசிப்பதில் சிரமம் ஆகியவை ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து, சிகிச்சைகளுக்காக அவர்கள் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பவர்களில் 10 பேர் சிகிச்சைகளின் பின் தங்களுடைய தங்கியிருந்த இருப்பிடத்துக்கு சென்றுள்ளதாகவும், 15 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருவதாகவும் , மாணவர்களின் உடல்நிலை மோசமானதாக இல்லை எனவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பொலன்னறுவை பகுதியில் இருந்து நுவரெலியாவிற்கு சுற்றுலா நிமிர்த்தம் பாடசாலை மாணவர்கள் , ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் என மொத்தமாக 73 பேர் வருகை தந்துள்ளனர்.
01 ஆம் திகதி காலை முதல் நுவரெலியா அம்பேவளை பகுதியினை சுற்றி பார்வையிட்டதன் பின்னர் மாலையில் அம்பேவளை பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் இரவு உணவு வாங்கி மாணவர்கள் உட்கொண்டுள்ளனர்.
அவ்வுணவை உட்கொண்ட மாணவர்களுக்கு திடீர் சுகவீனம் ஏற்பட்டது என தெரிவிக்கின்றனர் .
இது தொடர்பில் நுவரெலியா மாநகரசபை பொது சுகாதார பரிசோதகர்கள் மற்றும் நுவரெலியா பொலிஸாரும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.