உடன்கட்டை ஏற்றிய இந்தியாவின் கடைசி வழக்கு : 37 ஆண்டுகளுக்கு பின் 8 பேர் விடுதலை!
இந்தியா – ராஜஸ்தானில் உள்ள திவராலா பகுதியில் 37 ஆண்டுகளுக்கு முன்னர் ரூப் கவுர் என்ற 18 வயது பெண் உயிரிழந்த கணவனுடன் உடன்கட்டை ஏற்றிக் கொல்லப்பட்டார்.
அதாவது, கணவனின் சடலம் எரிந்துகொண்டிருக்கும் சிதைத்தீயில் ரூப் கவுரை இறக்கி அவ்வூர் மக்கள் கொலை செய்தனர்.
இந்து தர்மப் படி இதற்கு உடன்கட்டை ஏறுதல் என்று பெயர்.
சதி [sathi] என்ற பெயரில் சமஸ்கிருதத்தில் இது குறிப்பிடப்படுகிறது.
கணவன் இறந்தால் மனைவியும் விரும்பி உடன்கட்டை ஏற வேண்டும் என்ற வழக்கம் இருந்தது.
மனைவி விரும்பாவிட்டாலும் வலுக்கட்டாயமாக அவர்கள் தீயில் கருக்கப்படுவார்கள்.
இந்தக் கொடுமையான வழக்கத்தை ஒழிக்கச் சமூக சீர்திருத்தவாதி ராஜாராம் மோகன்ராய் உள்ளிட்டோர் நடத்திய தொடர் போராட்டங்களை அடுத்து 1829 ஆம் ஆண்டு அப்போதைய வைஸ்ராய் வில்லியம் பெண்டிங் பிரபு சதி வழக்கத்தை முற்றிலுமாக தடை செய்தார்.
ஆனாலும் அங்கொன்றும் இங்கொன்றுமாக சட்டத்தை மீறிச் சதி என்ற உடன்கட்டை ஏறும் பழக்கம் பின்பற்றப்பட்டு வந்தது.
அப்படி 1987 செப்டம்பர் 4 ஆம் திகதி கணவனின் எரியும் சிதையில் ஏற்றப்பட்டவரே 18 வயது ரூப் கவுர்.
இவரே இந்தியாவில் சதியால் உயிரிழந்த கடைசிப் பெண் என்று நம்பப்படுகிறது.
ரூப் கவுர் 18 வயதை அடைந்ததும் 1987 ஜனவரி 18 ஆம் திகதி ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் அருகே சிகாரா திவராலாவை சேர்ந்த மால் சிங் என்பவருக்குத் திருமணம் செய்து வைக்கப்பட்டார்.
ஆனால் திருமணமான 8 மதங்களிலேயே கணவர் மால் சிங் நோய்வாய்ப்பட்டு உயிரிழந்தார்.
எனவே இந்துமத வழக்கப்படி ரூப் கவுர், மால் சிங் எரியூட்டப்பட்ட சிதையில் உயிருடன் உடன்கட்டை ஏற்றப்பட்டு எரித்துக் கொல்லப்பட்டார்.
இந்த சம்பவம் தொடர்பாக ரூப் கவுரின் மாமனார், மைத்துனர் உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கே இந்தியாவின் கடைசி சதி வழக்காகும்.
1996 ஆம் ஆண்டு ஒக்டோபரில் மாமனார் – மைத்துனர் இருவருக்கும் எதிராக ஆதாரம் இல்லை என்று விடுவிக்கப்பட்டனர்.
அதன்பின் 2004 ஆம் ஆண்டு நடந்த விசாரணையில் ஆதாரங்கள் இல்லை எனக் கூறி 25 பேர் விடுவிக்கப்பட்டனர்.
மேலும் 6 பேர் சிறையிலேயே உயிரிழந்தார்கள்.
6 பேர் பிணையில் வெளியே வந்து தலைமறைவாகினர்.
இந்த வழக்கில் கைதானவர்களில் சிறையில் மீதமிருந்தது 8 பேர் மட்டுமே.
மகேந்திர சிங், ஷ்ரவன் சிங், நிஹால் சிங், ஜிதேந்திர சிங், உதய் சிங், தஸ்ரத் சிங், லக்ஷ்மண் சிங் மற்றும் பன்வர் சிங் என்ற இந்த 8 பேருக்கும் எதிராக எந்த ஆதாரமும் இல்லை எனக் கூறி சதி நிவாரண நீதிமன்றம் கடந்த புதன்கிழமை அன்று விடுதலை செய்து உத்தரவிட்டது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்