ஈரோஸ் ஜனநாயக முன்னணி சஜித் பிரேமதாஸவை ஆதரிக்க முடிவு

ஜனாதிபதி தேர்தலில் ஈரோஸ் ஜனநாயக முன்னணி சஜீத் பிரேமதாசவை ஆதரிக்க முடிவு செய்திருப்பதாக ஈரோஸ் ஜனநாயக முன்னணி விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அவ் ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பவை வருமாறு,

ஈரோஸ் ஜனநாயக முன்னணி இலங்கையில் பதிவு செய்யப்பட்ட ஒரு அரசியல் கட்சியாகும். இக்கட்சி ஈரோஸ் அமைப்பின் வழிவந்த உறுப்பினர்களால் உருவாக்கப்பட்டதாகும்.

இந்நிலையில் ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக கட்சியின் பொதுக்குழு கட்சி பல மட்டங்களில்  உறுப்பினர்கள், பிராந்திய மட்ட குழுக்கள், கட்சி நலன் விரும்பிகள் மற்றும் கட்சி முன்னணிக் குழுக்களுடன் கலந்துரையாடியதன் அடிப்படையில் தனது நிலைப்பாட்டை முன்வைத்திருக்கிறது.

எமது கட்சியானது ஒரு பிராந்தியத்தை மையப்படுத்தி செயற்படும் அமைப்பு அல்ல. நாம் வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத்தை இணைத்துச் செயற்படும் அரசியல் கட்சி என்ற அடிப்படையில் அனைத்து மக்களின் நலன்களையும் கருத்துக்களையும் முன்னிறுத்திய நிலைப்பாட்டை எடுக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

இந்நிலையில் மக்களின் தேவைகள் உரிமைகளை முன்னிலைப்படுத்தி மக்களின் கருத்துகளுக்கமைந்ததாகவே எமது முடிவு அமைய வேண்டியது இன்றியமையாதது.
குறிப்பாக, மலையகப் பிராந்தியங்களின் நலன்கள் எமது முடிவின் ஒரு கனதியான விடயமாக உள்ளது.

கட்சியின் முக்கிய நோக்கு மையமும் தற்போது மலையகப் பிராந்தியங்களின் நலன்கள் சார்ந்ததாகவே மையமிட்டுள்ளது.

இந்நிலையில் இலங்கையில் கிட்டத்தட்ட அறுபது வருடங்களுக்கும் அதிகமான காலங்களாக தமிழ்பேசும் மக்கள் பல்வேறு துயரங்களை அனுபவித்து வந்திருக்கிறார்கள்.

இந்த நாட்டை காலம் காலமாக ஆண்டு வருகின்ற ஆட்சியாளர்கள் இனரீதியான பாகுபாடுகளினடிப்படையில் தமிழ் மக்களுடன் நியாயமான முறையில் நடந்து கொள்ளாமையே இதற்கான அடிப்படைக் காரணமாக இருப்பது கண்கூடு.

இதன் விளைவே கடந்த காலங்களில் அகிம்சை வழியிலும், ஆயுத ரீதியிலும், ஜனநாயக வழிமுறைகளின் அடிப்படையிலும் நடைபெற்ற போராட்டங்கள் சான்று பகர்கின்றன.

இந் நிலையில் எதிர்வரும் இருபத்தோராம் திகதி புதிய ஜனாதிபதி ஒருவரைத் தெரிவு செய்வதற்காக தேர்தல் ஒன்று நடைபெறவுள்ளது. எனினும் எந்தவொரு பேரினவாதத் தலைவரையும் முழுமனதாக நம்புவதற்கு பெரும்பான்மையான தமிழ் மக்கள் தயாராக இல்லை. இருந்தபோதும் பூகோள அரசியல் நிகழ்வில் இலங்கையில் நடைபெறவுள்ள தேர்தலை புறம் தள்ளி விடவும் முடியாது. விரும்பியோ, விரும்பாமலோ நிகழ்கால அரசியல் சூழலுக்கு முகம்கொடுக்கவும், இதனூடாக நகர்ந்து செல்ல வேண்டிய தேவையும் உள்ளது.

இந்த அடிப்படையில் தமிழ்பேசும் மக்களுக்கு பிரச்சனைகள் உள்ளன என்பதனை ஏற்றுக் கொண்டும், எதிர்காலத்தில் அவ்வாறான பிரச்சனைகளை அமர்ந்து பேசி தீர்த்துக் கொள்வதற்கான வாய்ப்புகள் ஏற்படுத்தலாம் என்றும் ஏனையவர்களை விடவும் ஒரு நம்பிக்கையினை எமக்கு ஏற்படுத்தியமைக்காக இம்முறை ஜனாதிபதி வேட்பாளர், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை ஆதரிப்பது என்ற தீர்மானத்திற்கு வந்துள்ளோம்.

எனினும் வடக்கு, கிழக்கு பகுதிகளில் உள்ள மக்களின் மனோ நிலைமயினையும் நாம் புரிந்துகொண்டு செயற்பட வேண்டியது கட்டாயமாக உள்ளது என்பதனையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

குறிப்பாக மலையக மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக ஐக்கிய மக்கள் சக்தியுடன் நாம் பல்வேறு பேச்சுவார்த்தை நடத்தியதையும் வடக்கு கிழக்கு மக்களின் எதிர்ப்பார்ப்பு மற்றும் நலன் சார்ந்து முன்வைக்கப்பட்ட எமது கோரிக்கைகளை ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் சஜீத் பிரேமதாச பல்வேறு விடயங்களில் சாதகமான கருத்துக்களை வெளிப்படுத்தி இருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

ஒரு அரசியல் கட்சி என்ற வகையில் கட்சி மட்டத்தில் பிராந்தியங்கள் சார் தெரிவுகளும் முன்வைக்கப்படடன; விவாதிக்கப்பட்டன. ஆனால் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான கட்சியின் நிலைப்பாட்டை ஓரிரு தினங்களில் பகிரங்கமாக அறிவிக்க வேண்டிய கால அழுத்தம் கருதி எமது முடிவை அறிவிக்க வேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளோம்.

இவ்வாறான நிலையில் தமிழ்ப் பொதுக் கட்டமைப்பு வேட்பாளர் அரியநேத்திரனும் பிராந்தியங்களின் தெரிவாக பொதுக் குழுவில் முன்வைத்து ஆராயப்பட்டாலும் மலையக மக்களின் நலன்சார் தெரிவு ஒரு பொதுத் தெரிவாக அமைந்ததோடு தமிழ்தேசிய உணர்வும் மலினப்படுத்தக்கூடாது என்ற வகையிலும் கலந்துரையாடப்பட்டது ஆகவே தமிழ்பேசும்சமூகங்கள் இலக்கை அடையும் வரை இடைக்காலத்தில் மக்களின் தேவைகளை நிறைவேற்ற நேர்மையான சக்தியாக செயறுபடும் ஒரு அணியாகவும்
கடந்த காலங்களில் ஐக்கிய மக்கள் சக்தி எம்மோடு பல்வேறு பேச்சுவார்த்தைகளை நடத்தியதையபோது மக்கள்நலன் சார்ந்து முன்வைக்கப்பட்ட எமது கோரிக்கைகளை ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் சஜீத் பிரேமதாச பல்வேறு விடயங்களில் சாதகமான கருத்துக்களை வெளிப்படுத்தியிருந்தமையாலும் குறிப்பாக மலையக மக்களின் நலன் சார்ந்து ஒரு கருத்திணைவுக்கு வந்தபடியாலும் அரசியல் அமைப்பில் குறிப்பிட்டுள்ள 13ஆவது திருத்தசட்டத்தை முழுமையாக அமுல்படுத்துவதாக உறுதியளித்ததாலும் ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் சஜீத்பிரேமதாசவின் வெற்றிக்கு ஈரோஸ் ஜனநாயக முன்னணி தனது முழு ஆதரவை நல்க முன்வந்துள்ளது என்பதை கட்சியின் சார்பாக அறியத் தருகின்றோம் – என்றுள்ளது. மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்