
ஈரானில் விழித்தெழும் பிரம்மாண்ட எரிமலை – விஞ்ஞானிகள் ஆச்சரியம்
ஈரானில் சுமார் 7 இலட்சம் ஆண்டுகளாக எவ்வித அசைவுமின்றி, ‘அழிந்துவிட்டது’ எனக் கருதப்பட்டு வந்த தப்தான் (Taftan) எரிமலை, தற்போது மீண்டும் செயல்பாட்டுக்கு வந்துள்ளதாக செயற்கைக்கோள் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
மேற்காசிய நாடான ஈரான் மற்றும் பாகிஸ்தான் எல்லைக்கு அருகே அமைந்துள்ள இந்த எரிமலை 13,000 அடி உயரமுடையது.
ஐரோப்பிய விண்வெளி நிறுவனத்தின் ‘சென்டினல்-1’ (Sentinel-1) செயற்கைக்கோள் எடுத்த படங்களை ஆய்வு செய்தபோது, கடந்த 2023 ஜூலை முதல் 2024 மே வரையிலான 10 மாதங்களில் எரிமலையின் உச்சிப்பகுதி 9 சென்டிமீட்டர் உயர்ந்துள்ளது தெரிய வந்துள்ளது
இந்த எரிமலையின் உட்பகுதியில் ஆழமான இடத்தில் அதிகப்படியான வெப்பம் கொண்ட திரவங்கள் (Magma) மற்றும் வாயுக்கள் குவிந்து வருவதாலேயே, எரிமலையின் தரைப்பகுதி மேல்நோக்கி உயர்ந்துள்ளது என விஞ்ஞானிகள் விளக்கியுள்ளனர்.
இது அந்த எரிமலை மீண்டும் செயல்பாட்டுக்குத் தயாராவதற்கான அறிகுறியாகக் கருதப்படுகிறது.
கடந்த 7 இலட்சம் ஆண்டுகளாக எந்தவித எரிமலைக் குழம்பு கசிவோ அல்லது அசைவோ இல்லாததால், இது இதுவரை ‘அழிந்த எரிமலை’ (Extinct Volcano) என்று வகைப்படுத்தப்பட்டிருந்தது.
ஆனால், தற்போதைய மாற்றங்களை அடுத்து, இது ‘உறங்கும் எரிமலை’ (Dormant Volcano) என விஞ்ஞானிகளால் அதிகாரபூர்வமாக மறுவகைப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த திடீர் மாற்றம் அப்பகுதி நிலப்பரப்பில் புவியியல் ரீதியாக பெரும் மாற்றங்களை ஏற்படுத்தக்கூடும் என்பதால், விஞ்ஞானிகள் இந்த எரிமலையைத் தொடர்ந்து தீவிரமாகக் கண்காணித்து வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
