ஈராக்கில் ஜனாதிபதி மாளிகை முற்றுகை
ஈராக்கின் ஷியா மதகுரு முக்தாதா அல் சதாரின் ஆதரவாளர்கள் நாட்டின் அரசாங்க தலைமையகத்தை முற்றுகையிட்டதை அடுத்து, ஈராக் பிரதமர் முஸ்தபா அல்-காதிமி அமைச்சரவை அமர்வுகளை மறு அறிவிப்பு வரும் வரை இடைநிறுத்தியுள்ளார் என ஈராக் அரசு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
தற்போது, அந்நாட்டில் முக்தாதா அல்-சதாரின் ஆதரவாளர்களால் தொடங்கப்பட்ட எதிர்ப்பு இயக்கம் தீவிரமடைந்துள்ளது மற்றும் ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் ஏற்கனவே ஈராக்கின் பாக்தாத்தில் முகாமிட்டுள்ளனர்.
இதற்கிடையில், இன்று திங்கட்கிழமை பிற்பகல், இந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் ஜனாதிபதி மாளிகையின் பாதுகாப்பு கதவுகளை உடைத்து உள்ளே நுழைந்தனர்.
அதையடுத்து, பாக்தாத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்க ஈராக் பிரதமர் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
எவ்வாறாயினும், ஊரடங்கு உத்தரவை மீறி ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் நகரைச் சுற்றித் திரிவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இன்று மாலை ஜனாதிபதி மாளிகைக்குள் பிரவேசித்த ஆர்ப்பாட்டக்காரர்கள் பெரிய நீச்சல் குளத்தில் நீந்தி மகிழ்ந்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி பல வாரங்களுக்கு முன்னர் இலங்கையில் உருவான நிலைமையை நினைவுபடுத்துகிறது.
ஈராக்கில் தற்போதைய ஆட்சிக்கு எதிராகவும், அந்நாட்டு அரசாங்கத்தின் ஊழல் மற்றும் மோசடிகளுக்கு எதிராகவும் கடந்த பல மாதங்களாக, வெளிப்படையான ஆட்சி மற்றும் தற்போதைய முறையை மாற்றக் கோரி போராட்டக்காரர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.