இஸ்ரேல் தாக்குதலில் குடும்பத்தை இழந்த அல் ஜசீரா ஊடகவியலாளர்

இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் அல் ஜசீரா ஊடகத்தின் காஸா பிரிவு செய்தியாளர் Wael al-Dahdouh-வின் குடும்பத்தை சேர்ந்த நால்வர் கொல்லப்பட்டுள்ளனர்.

கட்டாரை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் அல் ஜசீரா ஊடகத்தின் காஸா பிரிவு தலைவர் Wael al-Dahdouh-வின் மனைவி, மகன், மகள், பேரன் என நால்வர் இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்டதாக அல் ஜசீரா ஊடகம் செய்தி வௌியிட்டுள்ளது.

காஸா மீதான தாக்குதல் தொடங்கிய பின்னர் இடம்பெயர்ந்த Wael al-Dahdouh-வின் குடும்பத்தினர் Nuseirat அகதிகள் முகாமில் தங்கியிருந்த போது, இஸ்ரேலின் தாக்குதலுக்கு இலக்காகியதாக அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குடும்பத்தார் உயிரிழந்த செய்தி அறிந்து அல் அக்ஸா மருத்துவமனைக்கு சென்ற Wael al-Dahdouh, தனது மகனின் சடலத்தை கைகளில் ஏந்தி ‘எங்களை பழி வாங்க எங்கள் குழந்தைகளை கொன்று குவிக்கின்றனர்’ என கூறி அழுதுள்ளார்.

53 வயதான Wael al-Dahdouh பல ஆண்டுகளாக பாலஸ்தீன போர் பற்றி செய்திகளை சேகரித்து வந்தவர்.

பாலஸ்தீனத்தில் குறிப்பாக காஸாவில் போர் பாதிப்புகளால் ஏற்பட்ட மக்களின் வேதனைகளை சாட்சிப்படுத்தியதால் காஸாவாசிகளால் கொண்டாடப்படும் Wael al-Dahdouh  தற்போது போருக்கு குடும்பத்தை பலி கொடுத்துள்ளார்.

கடந்த அக்டோபர் 7 ஆம் திகதி இஸ்ரேல் மீது ஹமாஸ் தீவிரவாதிகள் ஏவுகணை தாக்குதல் நடத்தினர். இதனைத் தொடர்ந்து இஸ்ரேல் மிகத் தீவிரமான பதில் தாக்குதலை மேற்கொண்டு வருகின்றது.

இஸ்ரேல் தாக்குதலில் இதுவரை 6500 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.