இஸ்ரேலுக்கு சென்று வேலை ஒப்பந்தங்களை மீறிய இலங்கையர்கள் நாடு கடத்தப்படுகின்றனர்!

இஸ்ரேலில் உள்ள 17 இலங்கைப் பிரஜைகள், அவர்களது வேலை ஒப்பந்தங்களை மீறியதற்காக நாடு கடத்தப்படுவதாக, இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார்.

நாடுகடத்தப்பட்டவர்கள் விவசாய வேலை வீசாவில் இஸ்ரேலுக்குள் நுழைந்தனர், ஆனால் அவர்கள் நியமிக்கப்பட்ட பணியிடங்களை விட்டு வெளியேறி, பேக்கரிகளில் பணிபுரிந்தனர் என தெரிவிக்கப்படுகின்றது.

இஸ்ரேலிய அதிகாரிகள் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் பொது இவர்கள் பிடிபட்டதாக குறித்த அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறு வேலை வீசாக்களில் இஸ்ரேலுக்குள் நுழைகின்றவர்கள் தமது வீசாவில் குறிப்பிடப்பட்டுள்ள வேலையை தான் செய்ய வேண்டும் என்றும், இவ்வாறான வேலை மாற்றங்களை செய்வதை இஸ்ரேல் அரசாங்கம் கடுமையாக தடை செய்துள்ளது என்றும், இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார்.

இதேபோன்ற ஒரு சம்பவத்தில், ஒரு வருடத்திற்கு முன்னர் இஸ்ரேலுக்கு பராமரிப்பு பணிக்காக சென்ற இலங்கைப் பெண் ஒருவர் தனது வேலை நிலைமைகளை மீறியதற்காக நாடு கடத்தப்பட்டார், மேலும் திருட்டு குற்றச்சாட்டின் பேரில் மற்றொரு இலங்கையர் நாடு கடத்தப்பட்டார்.

இவ்வாறான சூழ்நிலைகளைத் தவிர்ப்பதற்கும், இரு நாடுகளுக்குமிடையில் நல்லுறவைப் பேணுவதற்கும் தொழிலாளர்கள் தமது ஒப்பந்தக் கடமைகளை கடைப்பிடிக்குமாறு, இஸ்ரேலில் உள்ள இலங்கைத் தூதரகம் வலியுறுத்தியுள்ளது.