இஷாரா செவ்வந்தி தொடர்பில் பல உண்மைகள் விசாரணைகளில் வெளியாகியுள்ளன

கணேமுல்ல சஞ்சீவவின் கொலை இடம்பெற்ற பின்னர் இஷாரா செவ்வந்தி தலைமறைவாகியிருந்ததாகக் கூறப்படும் மித்தெனிய பகுதியிலுள்ள வீடு சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. குறித்த வீட்டிற்கு இஷாரா அழைத்துச் செல்லப்பட்டு அங்கு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

அத்துடன், தங்காலை பகுதியிலும் இஷாரா தங்கியிருந்துள்ளமை தெரியவந்துள்ளது.

இதேவேளை, சஞ்சீவவின் கொலைக்குப் பின்னர் இஷாரா செவ்வந்தி வாடகை வாகனம் ஒன்றினூடாக கிளிநொச்சிக்கு சென்று அங்கு சில நாட்கள் தங்கியுள்ளார்.

அதன் பின்னர் கிளிநொச்சியிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு சென்றுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

யாழ்ப்பாணத்திலிருந்து படகு மூலம் இந்தியாவிற்குத் தப்பிச் சென்றதாக இஷாரா குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவில் மூன்று வாரங்கள் தங்கியிருந்த நிலையில் அங்கிருந்து நேபாளத்திற்கு தப்பிச் சென்றதாகவும் அவர் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

இந்த நிலையில் பல மாதகால தேடுதலின் பின்னர் இஷாரா செவ்வந்தி உள்ளிட்ட 06 சந்தேக நபர்கள் நேபாளத்தில் கைது செய்யப்பட்டு நாட்டிற்கு அழைத்து வரப்பட்டனர்.

இதனையடுத்து, இஷாரா செவ்வந்தி உள்ளிட்ட 6 சந்தேக நபர்களையும் 72 மணித்தியாலங்கள் தடுப்பு காவலில் வைத்து விசாரணை செய்ய நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

எனினும், சந்தேக நபர்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தாது, அறிக்கைகளை சமர்ப்பித்து நீதவானிடம் தடுப்புக்காவலுக்கான அனுமதி பெறப்பட்டுள்ளது.

இஷாரா செவ்வந்தி, ஜப்னா சுரேஷ், ஜே.கே.பாய் மற்றும் டுப்ளிகேட் இஷாரா என்ற தக்ஷி ஆகியோர் கொழும்பு குற்றதடுப்பு பிரிவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
கம்பஹா பாபா என்பவர் மேல் மாகாண வடக்கு குற்றத் தடுப்புப் பிரிவிடமும், நுகேகொட பபி என்பவர் மேல் மாகாண தெற்கு குற்றத் தடுப்புப் பிரிவிடமும் ஒப்படைக்கப்பட்டனர்.