இலங்கை விவசாயத்துறையின் வளர்ச்சி மற்றும் வீழ்ச்சி
ஓகஸ்ட் மாதத்தில் இலங்கையின் விவசாயத்துறையில், நெல் மற்றும் தென்னை உற்பத்தி அதிகரித்துள்ள அதேவேளை, தேயிலை, இறப்பர், மீன் உற்பத்தி குறைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
மத்திய வங்கியின் செப்டம்பர் மாதத்துக்கான விவசாயத் துறை தரவுகளின் அடிப்படையில் 2025 ஆம் ஆண்டின் சிறுபோக பருவத்தில் நெல் உற்பத்தி 2.21 மில்லியன் மெட்ரிக் டன்களாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அத்துடன், 2025 ஆம் ஆண்டுக்கான மொத்த நெல் உற்பத்தி 4.96 மில்லியன் மெட்ரிக் டன்களாக இருக்கும் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது. இது 2024 ஆம் ஆண்டை விட 5.5 சதவீதம் அதிகமாகும்.
அதேநேரம், 2024 ஆம் ஆண்டில் ஓகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடுகையில் இந்த வருடத்தின் ஓகஸ்ட் மாதத்தில் தென்னை உற்பத்தி, 17.8 சதவீதம் அதிகரிப்பை பதிவு செய்து, நிலையான வளர்ச்சியைப் பிரதிபலிக்கிறது
எவ்வாறாயினும், குறித்த மாதத்தில் தேயிலை உற்பத்தியானது 7.8 சதவீதம் வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.
எனினும், ஜனவரி முதல் ஆகஸ்ட் வரையிலான மொத்த உற்பத்தியில் ஒரு சிறிய அதிகரிப்பு பதிவாகியுள்ளது என்று மத்திய வங்கி கூறுகிறது.
அதேநேரம், இறப்பர் அபிவிருத்தித் திணைக்களத்தின் தற்காலிகத் தரவுகளின்படி, இறப்பர் உற்பத்தியும் ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில் வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது