
-மஸ்கெலியா நிருபர்-
51 வருடங்களுக்கு முன்னர் நோட்டன் பகுதியில் உள்ள ஏழு கன்னி மலைத்தொடரில் 191 பேருக்கு மரணத்தை ஏற்படுத்திய பாரிய விமான விபத்து.
இலங்கையில் பாரிய விமான விபத்தொன்று ஏற்பட்டு 51 வருடங்கள் பூர்த்தி ஆகின்றது.
1974 ஆம் ஆண்டு டிசம்பர் 04 ஆம் திகதி இந்தோனேசியா புரோவெயார் விமான நிலையத்திலிருந்து புனித மக்கா யாத்திரை பயணிககள் மற்றும் பணியாளர்கள் உட்பட191 பேருடன் மக்கா நோக்கி பயணித்த விமானம் இரவு 10.00 மணியளவில் நோட்டன் பிரிஜ் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட திபர்டன் ஏழு கன்னி மலைத்தொடரில் மோதுண்டு, அதில் பயணித்த 183 பயணிகளும் அதன் பணியாளர்கள் 09 பேரும் அவ்விடத்திலேயே மரணித்தனர்.
இந்தோனேசியா புரோவெயார் விமான நிலையத்திலிருந்து மக்கா நோக்கி பயணித்த னு.ஊ 08 ரக இந்தோனேசியா விமானம் 36000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த நேரத்தில் விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறக்குவதற்கு விமானியால் கட்டுநாயக்க கட்டுப்பாட்டறையை தொடர்பு கொண்ட போது, 4000 அடிக்கு தாழ்த்துமாறு பணிக்கப்பட்டது.
அதன்படி பயணித்தபோது விமானத்தின் வலது பக்க வால் பகுதி ஏழு கன்னி மலையில் மோதுண்டதால் விமானம் வெடித்து சிதறியது.அதில் பயணித்த அனைவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
நோர்வூட் காசல்ரீ நீர் தேக்கத்தின் மேலாக பயணித்த இந்தோனேசியா விமானம், அன்று இரவு 10.00 மணிக்கு விபத்துக்குள்ளாகி அனைவரும் மரணமடைந்ததாகவும், அதில் பயணம் செய்த ஒரு பணிப்பெண் ஒருவரது சடலம் மட்டும் அவரது காதலரால் ஹெலிகொப்டர் மூலமாக இந்தோனேசியாவிற்கு எடுத்துச் சென்றதாகவும் அவ்விடத்திற்கு பார்வையிடச் சென்றவர்கள் தெரிவித்தனர்.
விமான விபத்து ஏற்பட்டு 51 ஆண்டுகள் பூர்த்தி அடைந்ததை முன்னிட்டு, அது பற்றி ஆராய ஏழு கன்னி மலையடிவாரத்திற்கு தேயிலை தோட்டத்திற்கு சென்றபோது, அப்பிரதேசம் காடாகிக் கிடந்தது.
இவ்விமான விபத்தை நேரில் கண்ட இருவரை கண்டுபிடித்ததுடன், அவர்களது அனுபவத்தை பகிர்ந்து கொண்டு போது இவ்வாறு தெரிவித்னர்.
நோர்வூட் கிளங்கன் பிரதேசத்தைச் சேர்ந்த 67 வயதுடைய திரு.ஜி.எச்.சில்வா தெரிவித்ததாவது.
அப்போது எனது வயது 19. நான் தியத்தலாவை தரைப்படை முதலாம் கெமுனு படையணியில் சாரதியாக பணியாற்றினேன். இவ் விபத்து ஏற்பட்ட பின்னர் முதலாம் கெமுனு பிரிவின் கட்டளையதிகாரியாகப் பணியாற்றிய மேஜர் லக்கி அல்கம அவர்களுடன் சுமார் 100 படையினரை அழைத்துக் கொண்டு விபத்து ஏற்பட்ட இடத்திற்கு விரைந்தோம்.
நாங்கள் கொத்தல்ஹேன சிங்கள பாடசாலையில் தங்கினோம். எமக்கு விமான விபத்தில் உயிரழந்தவர்களின் சடலங்களை சேகரிக்கும் பணி வழங்கப்பட்டது.
அதன்படி சிதறிக் கிடந்த சடலங்கை ஏழு கன்னி மலையடிவாரத்தில் சேகரித்தோம். அதன் பின்னர் விமான விபத்தில் இறந்த 190 பேரின் சடலங்களை அவ்விடத்திலேயே ஒரே குழியில் இட்டு அடக்கம் செய்தோம்.
இது வரை எனது வாழ்க்கையில் பார்த்த அகோரமான சம்பவமாக எண்ணுகின்றேன். இன்று நினைத்தலும் மிகுந்த வேதனையாக உள்ளது என தெரிவித்தார்.
ஏழு கன்னி மலையடிவாரத்தில் வசிக்கும் 62 வயதுடைய திரு.திலக் இது பற்றி தெரிவிக்கையில், விபத்து ஏற்படும் போது எனக்கு வயது 12. விபத்து ஏற்பட்ட பின்னர் அந்த இடத்தி;ற்கு ஏராளமானோர் வந்தனர்.
அவ்வாறு வருகை தந்தவர்கள் அநேகமானோர் விமானத்தின் உடைந்த பாகங்களை எடுத்துச் சென்றமை கண்டேன். பல நாட்களாக ஏராளமானோர் அவ்விடத்திற்கு பார்வையிட வந்ததாகத் தெரிவித்தார்.
இவ் விமான விபத்து நேரில் கண்ட ஏழு கன்னி மலையடிவாரத்தில் வசித்து வரும் 58 வயதுடைய திரு. வீரப்பன் ராஜ் தெரிவித்ததாவது, எனக்கு அப்போது 7-8 வயதிருக்கும் இரவு 10.00 மணியளவில் தேயிலை தொழிற்சாலையின் மணி அடித்தது.
நாங்கள் அனைவரும் தொழிற்சாலையை நோக்கி ஓடினோம். தோட்ட உரிமையாளரான திரு,சொய்ஸா அவர்கள் மலையில் விமானம் ஒன்று மோதிய சத்தம் கேட்டதாகத் தெரிவித்தார்.
பனிமூட்டம் நிறைந்து இருந்ததால் அவ்விடத்திற்கு செல்ல இயலாது என தெரிவித்தார். பின்னர் நோட்டன்பிரிஜ் பொலிஸ் நிலையத்திற்கு தகவல் அனுப்பினார். விபத்து நிகழ்ந்த மறுதினம் பொலிசார் நிறைய பேர் விபத்து நடந்த இடத்திற்கு வந்தனர்.
இரு ஹெலிகொப்டர்கள் வந்தன. அவை கீழ் பகுதியில் தான் நிறுத்தப்பட்டிருந்தது. இந்த விமான விபத்தை பார்வையிட வந்த பெரும்பாலானோர் உடைந்த விமானத்தின் உதிரிபாகங்களை எடுத்துச் சென்றனர் எனத் தெரிவித்தார்.
இப் பயணத்தின்போது இவ் விமானத்தில் பயணித்த பயணிகளது என எண்ணக் கூடிய ஹொங்கொங் நாட்டின் டொலர் நோட்டு ஒன்று கிடைத்தது.
விபத்துக்குள்ளான விமானத்தின் சக்கரம் ஒன்று இன்றும் ஞாபகார்த்தமாக நோட்டன் பிரிஜ் விமலசுரேந்திர நீர்த்தேக்கத்தின் முன்னால் காட்சி படுத்தப்பட்டுள்ளது.
அதில் விமானத்தில் பயணித்த விமானிகள் மற்றும் பணியாளர்களின் பெயர் பொறிக்கப்பட்டுள்ளது.
