இலங்கை ரக்பிக்கு உலக ரக்பி அமைப்பு இறுதி எச்சரிக்கை விடுப்பு

2025 ஒக்டோபர் 19ஆம் திகதிக்குள் நிர்வாகிகள் தேர்தல் நடைபெறவில்லை என்றால், இலங்கையின் ரக்பி விளையாட்டு விவகாரங்கள் தடை செய்யப்படும் என உலக ரக்பி அமைப்பு எச்சரித்துள்ளது.

உலக ரக்பி தேவைகளுக்கு ஏற்ப புதிய அரசியலமைப்பின் கீழ் நிர்வகிக்கப்படாவிட்டால் தடை விதிக்கப்படும் என்றும் இலங்கையின் ரக்பி நிர்வாகத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது .

இலங்கையின் ரக்பிக்கு, அதன் உள்ளக மோதல்களைத் தீர்க்க ஒரு வருடத்துக்கு மேலான கால அவகாசத்தை வழங்கிய உலக ரக்பி, தேசிய ஒலிம்பிக் குழுவுக்கு அனுப்பிய கடிதத்தில் இந்த இறுதி எச்சரிக்கையை விடுத்துள்ளது.

இலங்கை ரக்பியின் கடைசியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் ரிஸ்லி இல்லியாஸ் வெளியேறியதிலிருந்து, புதிய அரசியலமைப்பை உருவாக்குவதையும், மிகவும் தேவையான நிர்வாகிகளைத் தேர்ந்தெடுப்பதையும் தடுத்த நீதிமன்ற வழக்குகள் மூலம் ரக்பி நிர்வாகம் தொடர்ந்தும் மந்த நிலையில் செயற்பட்டு வருகிறது.

கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக, நிர்வாகிகள் தேர்தல் இல்லாத நிலையில், இலங்கை ரக்பி, அரசாங்க தகுதி வாய்ந்த அதிகாரசபை என அழைக்கப்பட்ட ஒன்றின் கீழ் கொண்டுவரப்பட்டது.

பின்னர் அது இரத்து செய்யப்பட்ட நிலையில், ரக்பி நிர்வாகம் இப்போது பணிக்குழு ஒன்றின் நிர்வாகத்தில் செயற்பட்டு வருகிறது.