Last updated on April 11th, 2023 at 07:57 pm

உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்துமாறு கோரி இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு

உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்துமாறு கோரி இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு

-யாழ் நிருபர்-

 

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடாத்துமாறு கோரி, ஐக்கிய மக்கள் சக்தியின் வட்டுக்கோட்டை மற்றும் ஊர்காவற்துறை தொகுதி அமைப்பாளர் முருகவேல் சதாசிவம் உள்ளிட்ட வேட்பாளர்கள் நால்வர் இன்று திங்கட்கிழமை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ் பிராந்திய அலுவலகத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளனர்.

முறைப்பாடு பதிவு செய்த பின்னர் முருகவேல் சதாசிவம் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,

எங்களது அடிப்படை உரிமை மீறப்பட்டமை தொடர்பாக இன்றைய  தினம் நாங்கள் இவ்வாறு முறைப்பாடு பதிவு செய்துள்ளோம்.

இலங்கையிலே ஜனநாயக ஆட்சி நடக்கிறது என சொல்லி வெளிநாடுகளுக்கு பரப்புரையை செய்துகொண்டு இருக்கின்ற ரணில் அரசாங்கம், பாராளுமன்றத்தில் தேர்தலுக்கான நிதியை ஒதுக்கீடு செய்த பின்னர் தேர்தல் திகதியை அறிவிக்குமாறு தேர்தல் திணைக்களத்திற்கு உத்தரவு வழங்கிவிட்டு, தனது கட்சிக்கான ஆதரவு இல்லை என்ற கள நிலவரத்தை அறிந்த பின்னர் வேண்டுமென்றே இந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்தாமல் இழுத்தடிப்பு செய்கிறது.

இந்த உள்ளூராட்சி தேர்தல் என்பது இலங்கையின் அரசியலில் மிகவும் முக்கியமான ஒரு தேர்தல். பாராளுமன்ற தேர்தலாக இருந்தாலும், ஜனாதிபதி தேர்தலாக இருந்தாலும் அதற்கு அடித்தளம் வகிப்பது இந்த உள்ளூராட்சி மன்ற தேர்தல் தான், எங்களுடைய உரிமையை தேர்தல் திணைக்களம் திட்டமிட்ட வகையில் சிதைத்துள்ளது.

இந்த அடிப்படை மனித உரிமை மீறல் தொடர்பாக நாங்கள் முறைப்பாடு செற்வதற்கான காரணம் ஒவ்வொரு தனி மனித சுதந்திரமும் பறிக்கப்பட்டுள்ளமையாலாகும்.

ஜனநாயக நாட்டில் தேர்தல் என்பது மிகவும் முக்கியமான ஒன்று. தேர்தல் ஒழுங்காக நடைபெறாவிட்டால் அந்த நாட்டில் ஜனநாயகம் இல்லை என்பது தான் அறிகுறி.

இந்த நாட்டு மக்களை பிழையான வழியில் திசை திருப்பி, அவர்களுக்கு இங்கு பஞ்சம் இருப்பதை அடையாளம் காட்டிக்கொண்டு தேர்தலை நடத்தாமல் இருப்பது ஒவ்வொரு மனிதனது அடிப்படை உரிமையையும் பறிக்கும் ஒரு செயலாகும்.

எனவே, நான் கேட்டுக்கொள்வது யாதெனில் மக்களே உங்களது பிராந்தியத்தில் உள்ள மனித உரிமைகள் ஆணைக்குழுவில் தேர்தலை நடாத்துமாறு கோரி முறைப்பாடு பதிவு செய்யுங்கள்,  என்றார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்