இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் உட்பட்ட சில அரச நிறுவனங்களை தனியார் மயமாக்க பரிசீலனை

அரச நிறுவனங்களை தனியார் மயமாக்குவது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருவதாக, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

The Economist இற்கு வழங்கிய நேர்காணலில், ஜனாதிபதி, தேசிய விமான சேவையான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ், ஸ்ரீலங்கா இன்சூரன்ஸ் மற்றும் ஸ்ரீலங்கா டெலிகொம் ஆகியவை தனியார் மயமாக்கப்படலாம் என்று தெரிவித்தார்.

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தை தனியார் மயமாக்குவது குறித்தும் பரிசீலிக்கப்பட்டு வருவதாக ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

சில அரச நிறுவனங்களை மறுசீரமைப்பதில் தொழிற்சங்கங்கள் விரோதப் போக்கை கடைப்பிடிப்பது குறித்து வினவியபோது,  ​​’சங்கங்களைப் பற்றி நான் கவலைப்படவில்லை, மக்கள் தான் முக்கியம்’ என்று ஜனாதிபதி தெரிவித்தார்.

மக்கள் நினைத்தால் அந்த தீர்மானத்தை ஏற்றுக்கொள்வார்கள் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

கடல்சார் பொருளாதாரத்தை நிர்வகிக்கும் சட்டங்களும் திருத்தப்பட வேண்டும் என்று தெரிவித்த ஜனாதிபதி, இந்த அம்சத்தில் இலங்கை அயர்லாந்தை முன்மாதிரியாக  கருதுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.