இலங்கை தொடர்பான அடுத்த கட்ட நடவடிக்கை : சர்வதேச நாணய நிதியத்தின் அறிவிப்பு

கடந்த ஏப்ரல் 25ஆம் திகதி, சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட கடன் வசதி திட்டத்தின் நான்காவது மீளாய்வுடன் தொடர்புடைய ஊழியர் மட்ட ஒப்பந்தம் எட்டப்பட்டிருந்தது.

அதன்படி, இலங்கை தொடர்பாக சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட கடன் வசதி திட்டத்தின் நான்காவது மீளாய்வுடன் தொடர்புடைய ஊழியர் மட்ட ஒப்பந்தத்திற்கு இணைந்ததாக, சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபையின் அங்கீகாரம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.

இதற்காக இலங்கை சர்வதேச நாணய நிதியத்தின் ஒப்பந்தங்களை முழுமையாக நிறைவேற்ற வேண்டும் என அதன் தொடர்பாடல் திணைக்களத்தின் பணிப்பாளர் ஜூலி கொசெக் சுட்டிக்காட்டியுள்ளார்.

இவர் இதனை, வாராந்திர IMF தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் குறிப்பிட்டார்.

குறித்த நிறைவேற்று சபை ஒப்பந்தத்தை எட்டுவதற்கு இலங்கை நிறைவேற்ற வேண்டிய முக்கியமான இரண்டு விடயங்களை வலியுறுத்திய ஜூலி கொசெக், மேலும் கூறுகையில், செலவுகளை ஈடுகட்டும் வகையில் மின்சார விலை நிர்ணயத்தை மீண்டும் நிறுவுவது மற்றும் தானியங்கி மின்சார விலை சரிசெய்வு முறைமையின் உரிய செயல்பாட்டை உறுதிப்படுத்துவதற்கு இலங்கை அரசாங்கம் விரைவாக நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்ப்பதாக தெரிவித்தார்.