இலங்கை திரையுலகில் ஒரு புரட்சி – திரையேறவுள்ள மௌனமொழி
இன்னும் சில மாதங்களில் திரையிடவுள்ள மௌனமொழி திரைப்பட இயக்குனருடனான சிறப்பு நேர்காணல்
01.புதிதாக மௌனமொழி என்ற திரைப்படத்தை உருவாக்கியுள்ளீர்கள். முதலில் இந்த திரைப்படம் குறித்த அறிமுகத்தை நேயர்களுக்காக பகிர்ந்துக் கொள்ளுங்கள்.
வணக்கம். மௌனமொழி புதிதாக உருவாக்கப்பட்ட திரைப்படம் அல்ல. இந்த திரைப்படம் உருவாக்கப்பட்டு 3 வருடங்கள் கடந்துள்ளது. இலங்கையை பொறுத்த வரையில் ஒரு முழு நீளத் திரைப்படத்தை உருவாக்கி அதை வெளியிடுவது என்பது மிகவும் சிக்கலான விடயம். சினிமாத் துறையை சார்ந்த அனைத்து நுணுக்கமாக விடயங்களும் தெரிந்து இருந்தால் மாத்திரமே திரையிடலை சாத்தியமாக்க முடியும். யூடியுப் ஐ அனைவரும் சரளமாக பாவிக்க முடிந்ததனால் நிறையப் பேர் குறும்படங்களை சமூக வளைத்தளங்களில் வெளியிட ஆரம்பித்து, அதற்கு பின்னர் அதை திரையிட முயற்சி செய்கிறார்கள். கடந்த 15 வருடங்களில் 30 அல்லது 40 பேரினால் மட்டுமே சில படங்களை திரையிட முடிந்தது. எமது நாட்டை பொறுத்தவரையில் சகோதர மொழியில் (சிங்கள மொழி) திரைப்படங்களை தயாரித்து வெளியிடுவது சாதாரணமான விடயமொன்று. ஆனால் தமிழ் மொழியில் அது சாதாரண விடயமல்ல. ஏன் தமிழ் திரைத்துறையில் அதை சாத்தியப்படுத்த முடியவில்லை என்பது தான் எனக்கும் ஏற்பட்ட பிரச்சினையாக இருந்தது. சக மனிதர்களின் அன்றாட வாழ்வியலை தான் நாங்கள் படமாக கூறி இருக்கின்றோம். கடந்த 3 வருடங்களாக பல்வேறு சவால்களுக்கு முகங்கொடுத்ததன் பின்னரே இந்த திரைப்படத்தை வெளியிடுகின்றோம். மிக விரைவில் இலங்கை முழுவதும் உள்ள அனைத்து திரையரங்குகளிலும் மெனனமொழி திரைப்படம் வெளியிடப்படவுள்ளது.
02.மௌனமொழி திரைப்படத்தில் பணியாற்றிய கலைஞர்கள் பற்றி குறிப்பிடுங்கள்.
பொதுவாகவே எமது நாட்டில் வெளிவரும் திரைப்படங்களை நாம் பார்த்தால் தொழில்முறை கலைஞர்களை பயன்படுத்துவது குறைவு. ஒரு சிலரால் மாத்திரமே அதை சாத்தியப்படுத்த முடியும். அதேபோல் தான் மௌனமொழி திரைப்படத்திலும் தொழில்முறை கலைஞர்களாக கதாநாயகனாக ஜனா சுது. கதாநாயகியாக தீப்திகாவும், ஒளிப்பதிவாளராக வினோத் த்ரோனும் , எடிட்டராக தனு ஹரியும் பணியாற்றினார்கள். இவர்களைத் தவிர ஏனைய அனைவருமே எனக்காக இந்த படத்தில் பணியாற்றியவர்கள். உதாரணமாக தனுஸ்கர், பிரகேஸ்,ஷாமிலா, சரண்,தரண், ஜெயசோதி ஆகியோர் சக பாத்திரங்களில் நடித்துள்ளார்கள். நிருக்ஷன், ஊஏ லக்ஷ் மற்றும் இந்திய தொலைக்காட்சியான ணநந தமிழ் சரிகமப நிகழ்ச்சியில் மகுடம் சூடிய கில்மிஷா ஆகியோர் இந்த திரைப்படத்தின் இசைக்கு பாரிய உதவிகளை செய்துள்ளார்கள். உதவி இயக்குனர்களாக லக்மி, பிரபாத்,கவின், பிரியதர்ஷினி ஆகியோர் பணியாற்றினார்கள். நிறைய பேரின் உழைப்பினால் இந்த திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளதுடன், அனைவருமே கடந்த 3 வருடங்களாக பொறுமையுடன் இந்த திரைப்படத்திற்காக காத்துக் கொண்டு இருக்கின்றார்கள்.
03.இலங்கையை பொறுத்தவரையில் தமிழ் திரைப்படமொன்றை உருவாக்கி அதை வெளியிட்டு வெற்றி பெறுவது எவ்வளவு சாத்தியம் என நினைக்கின்றீர்கள்?
நான் ஆரம்பத்திலேயே குறிப்பிட்டது போல எமது நாட்டில் தமிழ் திரைப்படமொன்றை உருவாக்கி அதில் வெற்றிக் காண்பது என்பது சாத்தியமான விடயமல்ல. சிங்கள திரைத்துறைக்கு இருக்கின்ற களம் தமிழ் திரைத்துறைக்கு இல்லை. ஒரு விடயத்தை நாம் தொடர்ந்து முயற்சி செய்து வருகின்ற பொழுது சாத்தியமாகாத விடயம் என ஒன்றும் இல்லை. இந்தவகையில் இலங்கையில் தமிழ் திரைத்துறை பாரய வளர்ச்சிக்கு எடுத்துச் செல்லப்படும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையில் நாங்கள் இன்று வரை செயற்படுகின்றோம். இதற்கு முன்னதாக நான் 15 குறும்படங்ளை உருவாக்கி எனது யூடியுப் தளத்தில் வெளியிட்டு இருக்கின்றேன். அவை எல்லாமே சிறிய பஜ்ஜெட்களிலேயே வெளியிட்டுள்ளேன். ஆனால் மௌனமொழி என்பது ஒரு முழு நீள திரைப்படம். இலங்கை திரைப்பட கூட்டுத்தாபனத்தில் நாங்கள் பதிவு செய்து இருக்கின்றோம். இது பதிவு செய்யப்பட்ட ஒரு திரைப்படம் என்பதால் கதைக்கரு, பார்வையாளர்களுக்கு கொண்டு செல்லும் விதம் என பல்வேறு பொறுப்புக்கள் எம்மிடம் இருக்கின்றன . அந்தவகையில் பொறுப்புணர்ச்சியுடனும் சமூக நோக்குடனுமே இந்த திரைப்படத்தை உருவாக்கி உள்ளோம் என்பதில் எவ்வித மாற்றுக் கருத்துக்களும் இல்லை. இந்த திரைப்படத்தை பெரும்பாளான மக்களிடம் கொண்டு செல்வதற்கான முயற்சிகளை எங்கள் குழு மேற்கொண்டு வருகின்றது. இந்த திரைப்படத்தை வெளியிடுவதன் மூலம் அடுத்த திரைப்படத்திற்கான முதலீடுகள் கிடைக்கும் என்பதுடன், பணியாற்றிய கலைஞர்களுக்கும் பல்வேறு வாய்ப்புகள் இதன் பின்னர் கிடைக்கும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கின்றது.
04.இலங்கை தமிழ் திரைப்படத்துறையில் போட்டி எந்தளவிற்கு இருக்கின்றது என நீங்கள் நினைக்கின்றீர்கள்?
1000 கோடி ரூபாய்க்கும் அதிகமாக கிடைக்க கூடிய தென்னிந்திய திரைத்துறையில் எவ்வாறான போட்டிகள் இருக்கின்றதோ அதேபோல தான் நம் நாட்டு திரையுலகிலும் போட்டிகள் இருக்கின்றன. ஆனால் தென்னிந்திய சினிமாவிற்கும் நம் நாட்டு சினிமாவுக்கும் அவ்வளவு வேறுபாடுகள் இருந்தாலும் போட்டிகள் மாத்திரம் ஒரே அளவு இருக்கின்றது என்பது கொஞ்சம் நகைப்புக்குரியதாகவே இருக்கின்றது. இருப்பினும் இவ்வாறான போட்டிகளை நான் ஆராக்கியமாகவே பார்க்கின்றேன்.
05.மௌனமொழி எவ்வாறான தாக்கத்தை இந்த சமூகத்திற்கு ஏற்படுத்தும் என நீங்கள் நினைக்கின்றீர்கள்?
மௌனமொழியின் கதைக்கருவை நான் சொன்னால் பார்வையாளர்களுக்கு சுவாரஸ்யமாக இருக்காது. ஆனால் இந்த திரைப்படம் சற்று வித்தியாசமாகவே காணப்படும். தென்னிந்திய சினிமாத்துறை தற்போது கொலை, கொள்ளை, துப்பாக்கிச் சண்டை என இருந்தால் தான் ஒரு படம் முழுமைப் பெறுவது போல் தற்போது ஆகிவிட்டது. அதேபோலதான் எமது நாட்டு கலைஞர்களின் சில திரைப்படங்களும் வெளிவருகின்றன. எம்மைச்சுற்றி ஏராளமான கதைகள் இருக்கின்றன. ஆனால் அவை எம் கண்களுக்கு தெரிவதில்லை. ஒரு காலக்கட்டத்தில் கேரளா, மலையாள படங்களுக்கு இவ்வளவு பெரிய இரசிகர்கள் இருக்கவில்லை. ஆனால், தற்போது உலகம் முழுவதும் இரசிகர்கள் இருக்கின்றார்கள். இலங்கை திரைப்படங்களுக்கும் எதிர்காலத்தில் இவ்வாறான இரசிகர்கள் உருவாக வேண்டும் என்றால் வாழ்வியலுடன் தொடர்புடைய யதார்த்தத்தை படமாக்க வேண்டும். இவ்வாறான படங்களையே பெரும்பாளானவர்கள் விரும்புகின்றார்கள் என்பதுடன் தொடர்ந்து முயற்சி செய்தால் பாரிய வெற்றியை பெறலாம் என்பதில் எவ்வித மாற்றுக் கருத்துகளும் இல்லை. அந்தவகையில் மௌனமொழி திரைப்படம் எம்முடன் இணைந்த யதார்த்தத்தை பிரதிபலிக்கின்றதாக அமையும் என்பதை நான் உறுதியாக கூறமுடியும்.
06.மௌனமொழிக்கு அடுத்ததாக நீங்கள் எவ்வாறான திரைப்படத்தை நீங்கள் உருவாக்க விரும்புகின்றீர்கள்?
தற்போது வெளிவர இருக்கும் மௌனமொழி திரைப்படத்தில் கதை இருக்கும். அதை நான் ஆணித்தளமாhக குறிப்பிட முடியும். கலைஞர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனி பாணி என்பது நிச்சயமாக காணப்படும். அதேபோல் தான் கதைகரு, ஜனரஞ்சகத்துடன் கூடிய யதார்த்தமான திரைப்படத்தை உருவாக்குவதே எனது பாணி. எனது அடுத்த படமும் அவ்வாறே அமையும். சிறந்த தயாரிப்பாளர் ஒருவர் கிடைக்கும் பட்சத்தில் சிறந்த திரைப்படங்களை வெளியிட முடியும் என நினைக்கின்றேன்.
07.எதிர்வரும் 10 வருடங்களின் பின்னர் இலங்கை திரைத்துறை எவ்வாறு இருக்கும்?
1960 ஆம் ஆண்டிலிருந்தே இலங்கையில் தமிழ் திரைப்படங்கள் எடுக்கப்பட்டு இருக்கின்றன. ஆனால் அவைபற்றி எங்களுக்கு தெரியாது. மரிகார் இராமதாஸ் அவர்கள் எடுத்த கோமாளி படம் பற்றி மாத்திரமே நாம் ஓரளவு அறிந்து வைத்துள்ளோம். அன்றைய காலக்கட்டத்திலும் நிறைய திரைப்படங்கள் எடுக்கப்பட்;டுள்ளன. நிறைய கலைஞர்கள் நடித்து இருக்கின்றார். ஆனால் அவை பற்றி முழுமையான தரவுகள் இல்லை. தரவுகளை நாம் சரியாக பராமரிக்கும் பட்சத்தில் எதிர்காலத்தில் உருவாகும். கலைஞர்களுக்கு அது இலகுவாக இருப்பதுடன், எமது சினிமாத்துறையை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்லவும் வழிவகுக்கும என்பதே எனது கருத்து.