
இலங்கை தமிழரசுக்கட்சியின் செயலாளர் பதவி யாருக்கு?
இலங்கை தமிழரசுக்கட்சியின் கட்சியின் புதிய தலைவர் கடந்த ஞாயிறுக்கிழமை வாக்கெடுப்பின் மூலம் தெரிவு செய்யப்பட்டார்.
நீண்டதொரு வரலாற்றைக் கொண்ட தமிழரசுக்கட்சியின் தலைவர் பதவிக்கு நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சீனிதம்பி யோகேஸ்வரன் ஆகியோர் போட்டியிட்டனர்
இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை திருகோணமலையில் இடம்பெற்ற ரகசிய வாக்கெடுப்பில் பெரும்பான்மையான வாக்குகளை பெற்று சிவஞானம் சிறீதரன் தமிழரசுக்கட்சியின் தலைவராக தெரிவு செய்யப்பட்டார்.
இவ்வாறான ஒரு நிலையில் தற்போது தமிழரசுக் கட்சியின் செயலாளர் பதவி யாருக்கு வழங்கப்படபோகிறது என்ற கேள்வி தமிழ் அரசியல் பரப்பில் ஒரு பரபரப்பான நிலையை உருவாக்கியுள்ளது.
செயலாளர் பதவி மட்டக்களப்பு மாவட்டத்திற்கு வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தமிழரசுக்கட்சியின் தலைவர் பதவிக்கான வாக்கெடுப்பு நடைபெறுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன் மட்டக்களப்பில் மட்டக்களப்பு மாவட்ட தமிழரசுக்கட்சி உறுப்பினர்கள் ஒரு கலந்துரையாடலை முன்னெடுத்திருந்தனர்.
அதனைத் தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் இரா சாணக்கியன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறீநேசன் மற்றும் அரியநேந்திரன் பாக்கிய செல்வம் ஆகியோர், ‘தலைவர் பதவியில் போட்டியிடும் சிறிதரன் மற்றும் சுமந்திரன் இருவரும் தாங்கள் வென்றால் செயலாளர் பதவியை மட்டக்களப்பு மாவட்டத்திற்கு வழங்குவதாக உறுதியளித்துள்ளாக’ தெரிவித்தனர்.
எனினும் தற்போது தலைவர் தேர்வு இடம்பெற்று நிறைவடைந்துள்ள நிலையில் சொன்னபடி செயலாளர் பதவி மட்டக்களப்பு மாவட்டத்திற்கு வழங்கப்படுமா என்பது கேள்விக்குறியாக இருப்பதாக பலரும் விமர்சித்து வருகின்றனர்.
அத்துடன் தமிழரசு கட்சியின் செயலாளர் பதவியை திருகோணமலையை சேர்ந்த குகதாசனுக்கு வழங்கவிருப்பதாகவும் சில உத்தியோகபூர்வமற்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.
மட்டக்களப்பிற்கு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்ட செயலாளர் பதவி சொன்னபடி வழங்கப்படாவிட்டால் தமிழரசுக்கட்சிக்குள் குழப்பநிலை உருவாக வாய்புள்ளது.
மேலும் செயலாளர் பதவி மட்டக்களப்பு மாவட்டத்திற்கு வழங்கப்படுமேயானால் அந்த பதவிக்கு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்தது சிறிநேசனுடைய பெயரை முன்மொழிந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறான ஒரு நிலையில் தமிழரசுக்கட்சியின் தலைவர் தேர்வை விட செயலாளர் தேர்வு அதிக எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
