இலங்கை சுதந்திர தினத்தை முன்னிட்டு சிரமதானமும் மரம் நடுகையும்
-யாழ் நிருபர்-
பருத்தித்துறை பொலிசாரின் ஏற்பாட்டில் பருத்தித்துறை பிரதேச சபை இணைந்து பருத்தித்துறை – மருதங்கேணி வீதியில் கிராமக்கோடு சந்தியிலிருந்து ஆனைவிழுந்தான் சந்திவரையும், ஆனைவிழுந்தான் சந்தியிலிருந்து வராத்துப்பளை சந்திவரையும் துப்பரவு செய்யும்பணி முன்னெடுக்கபட்டுள்ளது.
இலங்கையின் சுதந்திரதினத்தை முன்னிட்டு இன்று ஞாயிற்றுக்கிழமை இந்த சிரமதானப் பணி முன்னெடுக்கப்பட்டது.
பருத்தித்துறை பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி தலைமை பொலிஸ் பரிசோதகர் பண்டார தலைமையில் இடம்பெற்ற குறித்த சிரமதான பணியில், பருத்தித்துறை பொலிஸ் நிலைய பொலிசார், பருத்தித்துறை பிரதேச சபை உறுப்பினர் புலோலியூர் ரமணன், சபை உப தவிசாளர் காந்தரூபன், சபை செயலாளர், மற்றும் சபை உத்தியோகத்தர்கள் உட்பட பலரும் சிரமதானத்தில் ஈடுபட்டனர்.
இதேவேளை பருத்தித்துறை பொலிசாரால் பருத்தித்துறை பிரதேச சபையின் 6 ம் வட்டாரமான புலோலி, புற்றளை இளைஞர் கழக மைதானத்தில் பருத்தித்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையில் மரம் நடுக்கையும் இடம்பெற்றது.
