இலங்கை சுங்கம் 2,497 பில்லியன் ரூபாய் வருமானம்
இலங்கை சுங்கம் இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 2,497 பில்லியன் ரூபாய் வருமானத்தை ஈட்டி சாதனை படைத்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.
2025 ஆம் ஆண்டிற்காக நிதி அமைச்சினால் சுங்கத் திணைக்களத்துக்கு வழங்கப்பட்ட வருமான இலக்கு 2,115 பில்லியன் ரூபாய் எனவும், நவம்பர் மாதமாகும் போது அந்த இலக்கை விஞ்சிய வருமானத்தைத் திரட்ட முடிந்ததாகவும் சுங்க ஊடகப் பேச்சாளர், சுங்கப் பணிப்பாளர் சந்தன புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, நவம்பர் மாதத்தில் இந்த வருமான இலக்கு 2,115 பில்லியன் ரூபாயிலிருந்து 2,231 பில்லியன் ரூபாய் வரை திருத்தப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார் .
எவ்வாறாயினும், அந்தத் திருத்தப்பட்ட இலக்கும் தற்போது கடந்து சென்றுள்ளதாக சுங்க ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
சுங்கத் திணைக்களத்திற்குள் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு நடவடிக்கைகள் காரணமாக இந்த அதிக வருமானத்தை ஈட்ட முடிந்ததாகவும் சந்தன புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார் .
