இலங்கையும் சீனாவும் விவசாயத் துறையில் ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க உள்ளன. இதுதொடர்பாக விவசாய அமைச்சர் கே.டி. லால் காந்தாவுக்கும் இலங்கைக்கான சீனத் தூதுவர் வெய் ஹுவாசியாங்குக்கும் இடையில் செப்டம்பர் 14ஆம் திகதி கலந்துரையாடல் நடைபெற்றது.
இதன்போது நவீன விவசாய தொழில்நுட்பம், ஸ்மார்ட் விவசாயம், நிலையான விவசாய முறைகள் மற்றும் உற்பத்தித்திறனை அதிகரித்தல் உள்ளிட்ட விடயங்களில் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவது குறித்து கவனம் செலுத்தப்பட்டது.
சீனா, மண் நிலை, ஈரப்பதம் மற்றும் சுற்றுச்சூழல் காரணிகளை கண்காணிக்கும் மொபைல் பயன்பாடுகள் மூலம் விவசாய நடவடிக்கைகளை நிர்வகிக்கும் தொழில்நுட்பங்களை இலங்கைக்கு வழங்கத் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளது. மேலும், உவர்நிலத்திலும் வளரக்கூடிய கலப்பின நெல் வகைகள், வறண்ட மற்றும் ஈரமான காலநிலைகளுக்கு ஏற்ற நிலத் தயாரிப்பு தொழில்நுட்பங்கள், பசுமைக்குடில் விவசாயம் மற்றும் ஸ்மார்ட் விவசாயத் தொழில்நுட்பங்கள் குறித்தும் சீனா உதவ முன்வந்துள்ளது.
அதேவேளை, இலங்கையின் விவசாயப் பொருட்களுக்கு சீனாவின் மிகப்பெரிய சந்தையில் அதிக வாய்ப்புகளை உருவாக்குவது குறித்தும் கலந்துரையாடப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.










