இலங்கை கடன் முகாமைத்துவத்தில் புதிய மாற்றம்

இலங்கை மத்திய வங்கியின்  கீழ் இயங்கி வந்த பொதுக்கடன் திணைக்களம் மூடப்படுவதாகவும், அதன் சில முக்கிய பணிகள் நிதி அமைச்சுக்கு மாற்றப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மாற்றங்கள் 2026 ஜனவரி 01 முதல் நடைமுறைக்கு வருகின்றன.

2024 ஆம் ஆண்டின் 33 ஆம் இலக்க பொதுக்கடன் முகாமைத்துவச் சட்டத்தின் கீழ், நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் கீழ் பொதுக்கடன் முகாமைத்துவ அலுவலகம் 2024 டிசம்பரில் நிறுவப்பட்டது.

இந்த PDMO அலுவலகம் 2025 டிசம்பரில் முழுமையாகச் செயல்பாட்டுக்கு வந்தது.

இதன்படி, மத்திய வங்கியின் பொதுக்கடன் திணைக்களம் இதுவரை மேற்கொண்டு வந்த கடன் முகாமைத்துவப் பணிகளை இனி இந்த அலுவலகமே பொறுப்பேற்கும்.

பொதுக்கடன் திணைக்களத்தின் கீழ் இயங்கிய LankaSecure பிரிவு, மத்திய வங்கியின் கட்டணங்கள் மற்றும் தீர்ப்பனவுகள் திணைக்களத்திற்கு (PSD) மாற்றப்பட்டுள்ளது.

புதிய சட்ட விதிகளின்படி, அரசாங்க பிணையங்கள் தொடர்பான சில தொழில்நுட்பப் பணிகளை மத்திய வங்கி தொடர்ந்து முன்னெடுக்கும்.

தாள் அற்ற பிணையங்கள் தீர்ப்பனவு முறைமை மற்றும் மத்திய வைப்பு முறைமை ஆகியவற்றை மத்திய வங்கியின் PSD திணைக்களம் தொடர்ந்து நிர்வகிக்கும்.

அரசாங்க பிணையங்களின் பதிவாளராக நியமிக்கப்பட்டுள்ள PSD திணைக்களத்தின் பணிப்பாளரின் மேற்பார்வையின் கீழ் இந்த அமைப்புகள் இயங்கும்.