இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் (BASL) மற்றும் அவுஸ்திரேலிய சட்ட சபை (Law Council of Australia) ஆகியவற்றுக்கு இடையே சட்டத்துறை ஒத்துழைப்பை வலுப்படுத்தும் வகையில் சிறப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) கைச்சாத்திடப்பட்டுள்ளது.
தென் கொரியாவின் சியோலில் நடைபெற்ற 39ஆவது LAWASIA சர்வதேச மாநாட்டின் பக்க நிகழ்வாக இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ராஜீவ் அமரசூரிய மற்றும் அவுஸ்திரேலிய சட்ட சபையின் தலைவர் தனியா வோல்ஃப் ஆகியோர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
இரு நாடுகளையும் சேர்ந்த சட்டத்தரணிகளுக்கு இடையிலான ஒத்துழைப்பு மற்றும் பரிமாற்றங்களை மேம்படுத்துதல், சட்டத் தகவல்கள் மற்றும் ஆவணங்களைப் பகிர்ந்து கொள்வதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்துதல் ஆகியவை இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் முக்கிய நோக்கங்களாகும். சட்டத்தின் ஆட்சி, சட்டத்துறையின் சுயாதீனம் மற்றும் நீதித்துறையின் சுதந்திரம் ஆகியவற்றை பாதுகாப்பதற்கான இரு தரப்பினரின் உறுதிப்பாட்டையும் இந்த ஒப்பந்தம் அடிப்படையாகக் கொண்டுள்ளது.
1933ஆம் ஆண்டு நிறுவப்பட்ட அவுஸ்திரேலிய சட்ட சபை, அந்நாட்டின் சட்டத்துறையை பிரதிநிதித்துவப்படுத்தும் தேசிய மட்டத்திலான பிரதான அமைப்பாகும். அதன் கீழ் 107,000க்கும் மேற்பட்ட சட்டத்தரணிகள் பிரதிநிதித்துவப்படுத்தப்படுகின்றனர்.










