
இலங்கையில் ‘டிட்வா’ சூறாவளியால் ஏற்பட்ட சேதங்கள்: உலக வங்கி அறிக்கை
கடந்த நவம்பர் மாத இறுதியில் இலங்கையைத் தாக்கிய ‘டிட்வா’ சூறாவளியால், கட்டிடங்கள், விவசாயம் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளுக்கு சுமார் 4.1 பில்லியன் அமெரிக்க டொலர் நேரடிப் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக உலக வங்கியின் மதிப்பீட்டு அறிக்கை (GRADE) தெரிவித்துள்ளது.
இதன்படி இலங்கையின் 25 மாவட்டங்களிலும் சுமார் 20 லட்சம் மக்கள் மற்றும் 5 லட்சம் குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
மேலும் மத்திய மாகாணம் மிக மோசமாக பாதிக்கப்பட்ட மாகாணமாகும்.
குறிப்பாக கண்டி மாவட்டத்தில் வெள்ளம் மற்றும் மண்சரிவினால் 689 மில்லியன் டொலர் சேதம் ஏற்பட்டுள்ளது.
அத்துடன் வீதிகள், பாலங்கள் மற்றும் புகையிரத பாதைகளுக்கு 1.735 பில்லியன் டொலர் சேதம் ஏற்பட்டுள்ளது.
குடியிருப்பு கட்டிடங்கள் மற்றும் உடமைகளுக்கு 985 மில்லியன் டொலர் சேதம் ஏற்பட்டுள்ளது.
நெல், மரக்கறிகள் மற்றும் கால்நடைகளுக்கு 814 மில்லியன் டொலர் சேதம் ஏற்பட்டுள்ளது, இது உணவுப் பாதுகாப்பிற்கு பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது.
பாடசாலைகள், மருத்துவமனைகள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு 562 மில்லியன் டொலர் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
ஏற்கனவே வறுமையில் உள்ள குடும்பங்கள், பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் மற்றும் முதியவர்கள் இந்த அனர்த்தத்தால் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
பதுளை, கேகாலை மற்றும் புத்தளம் போன்ற மாவட்டங்களில் வறுமை நிலை காரணமாக மீட்சி பெறுவதில் அதிக சவால்கள் உள்ளன.
மீட்புப் பணிகளுக்காகவும், அத்தியாவசிய சேவைகளை (சுகாதாரம், கல்வி, நீர் விநியோகம்) சீரமைக்கவும் உலக வங்கி முதற்கட்டமாக 120 மில்லியன் அமெரிக்க டொலர்களை ஒதுக்கியுள்ளது.
“இந்த மதிப்பீடு வெறும் நேரடிப் பாதிப்புகளை மட்டுமே காட்டுகிறது. உண்மையான மீளமைப்பு மற்றும் புனரமைப்புச் செலவுகள் இதைவிட அதிகமாக இருக்கும்,” என உலக வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.
