இலங்கையில் டிஜிட்டல் மயமாக்கலுக்கு ஒரகல் நிறுவனம் ஆதரவு!

ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்ற உலக அரச உச்சி மாநாட்டின் பின்னர், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நேற்று ஒரகல் நிறுவனத்தின் நிறைவேற்று உப தலைவர் மைக் சிசிலியாவுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

பொருளாதாரம் மற்றும் நிர்வாகச் செயற்திறனை மேம்படுத்துவதற்காக இலங்கையின் டிஜிட்டல் மாற்றம், பின்டெக் சேவை மற்றும் கிளவுட் உட்கட்டமைப்பு வசதிகளை பயன்படுத்திக்கொள்ளல் தொடர்பில் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.

இலங்கையின் டிஜிட்டல் மயமாக்கலுக்கு ஆதரவளிக்க ஒரகல் விருப்பம் தெரிவித்ததுடன், தரவு சுயாதீனத் தன்மை மற்றும் ஒழுங்குமுறை இணக்கப்பாடுகளை உறுதிப்படுத்தி, அரசாங்க விண்ணப்பங்கள், இலத்திரனில் நிர்வாக வசதிகள் மற்றும் தேசிய தரவு கட்டமைப்பு ஒன்றை ஸ்தாபிப்பதற்கும் முன்வருமாறு ஜனாதிபதி ஒரகல் நிறுவனத்துக்கு அழைப்பு விடுத்தார்.

பணமில்லா பொருளாதாரத்தை நோக்கிய இலங்கையின் நகர்வை விரைவுபடுத்தும் நோக்கில் ஜனாதிபதி மற்றும் ஒரகல் நிறுவனத்தின் நிறைவேற்று உப தலைவர் மைக் சிசிலியா ஆகியோர் பின்டெக் மற்றும் டிஜிட்டல் கொடுப்பனவு வசதிகளுக்கான ஆரம்பகட்ட முயற்சிகள் குறித்தும் கலந்துரையாடினர்.

இதற்காக, கொழும்பு துறைமுக நகரத்திற்குள் டிஜிட்டல் மயமாக்கல் மையமொன்றை அமைக்குமாறு ஒரகல் நிறுவனத்திற்கு அழைப்பு விடுத்த ஜனாதிபதி, அது தெற்காசிய செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் கிளவுட் (Cloud Hub) மையமாக செயற்படும்.

அதற்கான குழுவொன்றை இலங்கைக்கு அனுப்புமாறு ஜனாதிபதி மைக் சிசிலியாவிடம் கோரிக்கை விடுத்தார்.