இலங்கையில் உயர்கல்வி அல்லது அதற்கு மேற்பட்ட கல்வித் தகுதி பெற்ற 15 முதல் 24 வயதுக்குட்பட்ட இளைஞர்களின் வேலைவாய்ப்பின்மை விகிதம் 43 சதவீதமாக உள்ளதாக சர்வதேச நாணய நிதியம் (IMF) தெரிவித்துள்ளது. ஆசிய–பசிபிக் பிராந்தியத்தில் ஒப்பிடப்பட்ட 12 பொருளாதாரங்களில் இலங்கையே அதிக விகிதத்தைக் கொண்டுள்ளதாக IMF-ன் Finance & Development இதழில் வெளியிடப்பட்ட ஆய்வு குறிப்பிடுகிறது.
இலங்கையின் 43 சதவீத விகிதம், சுமார் 36 சதவீதமாக உள்ள பங்களாதேஷை விட ஏழு சதவீதப் புள்ளிகள் அதிகமாகும். அதேவேளை, தாய்லாந்தில் உயர்கல்வி பெற்ற இளைஞர்களின் வேலைவாய்ப்பின்மை 13.2 சதவீதமாக பதிவாகியுள்ளது. கல்வித் தகுதி அதிகரிக்கும் நிலையில் வேலைவாய்ப்பின்மையும் அதிகரிப்பது தெற்கு ஆசியாவில் குறிப்பாக தீவிரமாக காணப்படுவதாக IMF சுட்டிக்காட்டியுள்ளது.
கல்வி நிறுவனங்களில் கற்பிக்கப்படும் திறன்களுக்கும் தொழில்துறையின் தேவைகளுக்கும் இடையிலான பொருத்தமின்மை இதற்கான முக்கிய காரணிகளில் ஒன்றாக இருப்பதாக IMF தெரிவித்துள்ளது. செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட புதிய தொழில்நுட்பங்கள் வேகமாக வளர்ந்து வரும் நிலையில், கல்வி மற்றும் தொழில்நுட்பப் பயிற்சி திட்டங்களை வேலைவாய்ப்பு சந்தையின் தேவைகளுக்கு ஏற்ப மாற்றுவதுடன், இளைஞர்களுக்கு தேவையான புதிய திறன்களை வழங்க வேண்டியதன் அவசியத்தையும் IMF வலியுறுத்தியுள்ளது.
இலங்கையின் உள்நாட்டு தரவுகளும் கல்வியறிவு பெற்ற இளைஞர்களிடையே வேலைவாய்ப்பின்மை குறிப்பிடத்தக்க அளவில் இருப்பதை காட்டுகின்றன. 2025ஆம் ஆண்டின் நான்காவது காலாண்டில் 15–24 வயதினருக்கான மொத்த வேலைவாய்ப்பின்மை விகிதம் 18.7 சதவீதமாகவும், G.C.E. A/L மற்றும் அதற்கு மேற்பட்ட கல்வித் தகுதி பெற்றவர்களுக்கான மொத்த வேலைவாய்ப்பின்மை 5.2 சதவீதமாகவும் பதிவாகியுள்ளது.










