இலங்கையில் கருவுறுதலை ஒத்திவைக்கும் இளம் தலைமுறை : பிறப்பு வீதத்தில் பாரிய தாக்கம்!

இளம் தலைமுறையினர் குழந்தை பெறுவதை ஒத்திவைப்பதால், இலங்கையில் பிறப்பு வீதம் கடுமையாகச் சரிந்து வருவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் சனத்தொகை நிதியத்தின், 2025 உலக சனத்தொகை அறிக்கையை வெளியிடும் நிகழ்வில் கலந்து கொண்டு கொழும்பு பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் லக்ஷ்மன் திசாநாயக்க இதனைத் தெரிவித்தார்.

இளம் தம்பதிகள் அதிக குழந்தைகளைப் பெற விரும்பினாலும், நிதி உறுதியற்ற தன்மை, தொழில் பாதுகாப்பின்மை மற்றும் அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவுகள் அவர்களை ஊக்கப்படுத்துவதில்லை.

இது நாட்டை ஒரு “கருவுறாமை பொறிக்குள்” தள்ளுகிறது என்று அவர் குறிப்பிட்டார்.

தொகை மதிப்பு மற்றும் புள்ளி விபரத் திணைக்களத்தின் தரவுகளுக்கமைய, தற்போது சனத்தொகை வளர்ச்சி வீதம் மிகக் குறைவாக உள்ளது.

1871 ஆம் ஆண்டு முதல் எப்போதும் இல்லாத அளவுக்கு, சனத்தொகை வளர்ச்சி வீதம் 0.5 சதவீதத்தை எட்டியுள்ளது.

அத்துடன், ஐக்கிய நாடுகள் சனத்தொகை நிதியத்தின் தரவுகளின்படி, தேசிய கருவுறுதல் வீதம் தற்போது ஒரு பெண்ணுக்கு 1.9 குழந்தை என்ற விகிதத்தில், முந்தையை நிலைக்கும் குறைவாக உள்ளது.

கருவுறுதல் சரிவு என்பது தனிப்பட்ட ஆசைகளால் ஏற்பட்டதல்லவெனவும் மாறாக அமைப்புகள் தோல்வியடைந்ததால் ஏற்பட்ட நிதி நெருக்கடி காரணமாக, திருமணங்கள் தாமதமானதால் ஏற்பட்டுள்ளதாகவும், பேராசிரியர் லக்ஷமன் திசாநாயக்க சுட்டிக் காட்டியுள்ளார்.