இலங்கையில் இந்திய ரூபாவில் கடன்களை பெற அனுமதி

இலங்கை, பூட்டான், நேபாளம் ஆகிய நாடுகளுக்கு இந்திய ரூபாயில் கடன்களை வழங்க இந்திய ரிசர்வ் வங்கி தீர்மானித்துள்ளது.

இந்திய ரிசர்வ் வங்கி (RBI) வெளியிட்டுள்ள அறிவித்தலின் படி, அந்நியச் செலாவணி முகாமைத்துவம் (கடனை பெறுதல் மற்றும் கடன் வழங்குதல்) விதிமுறைகளில் முக்கியமான திருத்தத்தைக் கொண்டு வந்துள்ளது.

அதன்படி அந்நியச் செலாவணி முகாமைத்துவச் சட்டம், 1999 இன் 42 வது உறுப்புரிமையின் கீழ், இந்திய ரிசர்வ் வங்கி (RBI) “அந்நியச் செலாவணி முகாமைத்துவ (கடன் பெறுதல் மற்றும் கடன் வழங்குதல்) (திருத்தம்) விதிமுறைகள், 2025” என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

புதிய திருத்தத்தின்படி, இந்திய வங்கிகள் (அத்துடன் அவற்றின் வெளிநாட்டுக் கிளைகளும்) இலங்கை, பூட்டான், நேபாளம் ஆகிய நாடுகளின் வங்கிகள் அல்லது தனிநபர்களுக்கு இந்திய ரூபாயில் (INR) கடன் வழங்க அனுமதி வழங்கியுள்ளது.

இந்தக் கடன் வழங்குதல் எல்லை தாண்டிய வர்த்தகப் பரிவர்த்தனைகளுக்காக (cross-border trade transactions) அனுமதிக்கப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கை இலங்கையில் உள்ள வணிகங்களுக்குக் கடன் பெறுதலை எளிதாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பாக, கடன்கள் இந்திய ரூபாயில் வழங்கப்படுவதால், இலங்கை வணிகங்கள் அந்நியச் செலாவணி மாற்று விகித இடர்களைக் குறைத்துக்கொள்ள முடியும்.

இது இரு நாடுகளுக்கும் இடையேயான எல்லை தாண்டிய வர்த்தகம் மற்றும் நிதித் தொடர்புகளை மேலும் வலுப்படுத்த உதவும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.