இலங்கையிலிருந்து சீனாவுக்கு குரங்குகள் ஏற்றுமதி வழக்கை முடிவு?

சட்டத்துக்கு  முரணான வகையில் சீன நிறுவனம் ஒன்றுக்கு  இலங்கையிலிருந்து குரங்குகளை  ஏற்றுமதி செய்ய நடவடிக்கை எடுக்க மாட்டோம் என நீதிமன்றில் உறுதிமொழி வழங்கியதையடுத்து, அரசாங்கத்துக்கு  எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவின் விசாரணையை முடித்துக் கொள்ள  மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

ஒரு இலட்சம் குரங்குகளை சீன நிறுவனம் ஒன்றுக்கு அனுப்பி வைக்கவுள்ளதாகவும் இந்த நடவடிக்கையை தடை செய்யுமாறும் கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் விசாரணையின்போது நீதியரசர் நிஸங்க பந்துல கருணாரத்ன மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் சமத் மொராயஸ் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த தீர்மானத்தை அறிவித்தது.

இந்த மனு முன்னர் அழைக்கப்பட்டபோது, சட்டமா அதிபர் நீதிமன்றில் உறுதிமொழி ஒன்றை வழங்கியதுடன், இந்த நாட்டிலிருந்து குரங்குகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கு எந்தவிதமான திட்டங்களும் இல்லை எனத் தெரிவித்தார்.