இலங்கையின் மிகப்பெரிய யானையின் உயிருக்கு கடுமையான அச்சுறுத்தல்!
இலங்கையின் மிகப்பெரிய யானை என்று கருதப்படும் ‘கவன்திஸ்ஸ”வின் உயிருக்குக் கடுமையான அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் மிகவும் கம்பீரமான காட்டு யானையாக இருந்த ‘சியம்பலங்கமுவ யானை’யின் மரணத்தைத் தொடர்ந்து, 2012 இல் ‘கவன்திஸ்ஸ’ பெரிய யானையாகப் பெயரிடப்பட்டது.
இருப்பினும், மனித நடவடிக்கைகள் காரணமாக, கலேவெல பகுதியிலிருந்து கல்கமுவ, தப்போவ மற்றும் வில்பத்து வழியாக கவன்திஸ்ஸவின் பாரம்பரிய வருடாந்த இடம்பெயர்வு பாதை இப்போது முற்றிலும் அணுக முடியாதாகிவிட்டது.
அத்துடன் யானையின் வாழ்விடத்தின் ஒரு பகுதியாக இருந்த பாலுகடவல, மகாகல்கமுவ மற்றும் இகினிமிட்டிய போன்ற நீர்நிலைகள், மனிதர்களால் அதிகளவில் அழிக்கப்பட்டு வருகின்றன.
இதன் விளைவாக, கவன்திஸ்ஸ இப்போது அதன் இயற்கையான வாழ்விடத்தின் பெரும்பகுதியை இழந்துவிட்டதாகக் கூறப்படுகிறது.
இதன் காரணமாக கவன்திஸ்ஸ கல்கமுவ மற்றும் அம்பன்பொல பகுதிகளில் சுற்றித் திரிவதாகச் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர் இதற்கிடையில், கவன்திஸ்ஸவின் உடலின் இடது பக்கத்தில் பல காயங்கள் இருப்பதைச் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கவனித்துள்ளனர்.
அவை சமீபத்திய துப்பாக்கிச் சூட்டுக் காயங்களாக இருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.
அத்துடன் கவன்திஸ்ஸ தலைமையிலான கூட்டத்தைச் சேர்ந்த பல யானைகளும் கால்களில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் நடமாடுகின்றன.
கால்நடை மருத்துவர்கள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் கூற்றுப்படி, கவன்திஸ்ஸ என்ற யானையின் உயிருக்குக் கடுமையான அச்சுறுத்தல் உள்ளமையை வெளிப்படுத்துகிறது.