
இலங்கையின் கசிப்புதான் ரஷ்யாவில் “வோட்கா” : கசிப்பை தரமாக்கி டொலர்களை பெறலாம் -டயானா
மக்களை ‘காசிப்புக்காரன்’ மற்றும் ‘கஞ்சாக்காரன்’ என்று முத்திரை குத்தாமல், சட்டவிரோத கசிப்பு மற்றும் கஞ்சா ஆகியவற்றை நல்ல தரத்தில் மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதன் மூலம் நாட்டிற்கு அதிக டொலர்களை பெற்றுக்கொள்ள முடியும் என சுற்றுலா இராஜாங்க அமைச்சர் டயானா கமகே தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், மதுபானங்களின் விலை அதிகரிப்பு காரணமாக மக்கள் தமது வீடுகளில் சட்டவிரோத மதுபானங்களை வடிக்க ஆரம்பித்துள்ளதாகவும், அது 500 வீதம் வரை அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்தார்.
எனவே, சட்டவிரோத மதுபானங்களை வீடுகளில் வடிகட்டுவதை தடுக்க மதுபானங்களின் விலையை குறைக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
கஞ்சாவை மற்றும் கசிப்பை பயன்படுத்துபவர்களை ‘கஞ்சாக்காரன் காசிப்புக்காரன்” என்று முத்திரை குத்துகிறார்கள், மக்களுக்கு கள்ளச்சாராயம் மற்றும் கஞ்சாவின் மதிப்பு புரியவில்லை. இலங்கையில் சட்டவிரோத மதுபானம் போன்றதுதான் ரஷ்யாவில் ‘வோட்கா’ மற்றும் ஜப்பானில் ‘சேக்’ என அமைச்சர் டயானா தெரிவித்தார்.
தூய்மையான பழங்களை பயன்படுத்தி வடிசாராயம்; செய்யப்படுகிறது. இதை பெரிய அளவில் தரமான பொருளாக செய்தால், மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யலாம். அங்கிருந்து, நம்மால் நினைத்து பார்க்க முடியாத டாலர்கள் கிடைக்கும் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதை நான் நிச்சயமாக ஒரு பிரேரணையாக பாராளுமன்றத்திற்கு கொண்டுவருவேன் எனவும் தெரிவித்துள்ளார்.
