இலங்கையின் ஓட்டுநர் உரிமத்திற்கு விரைவில் சர்வதேச அங்கீகாரம் கிடைக்கும் – மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் ஜெனரல் கமல் அமரசிங்க!

 

எதிர்காலத்தில் கிட்டத்தட்ட நூறு வெளிநாடுகளுக்கு செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமத்தை அறிமுகப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருவதாக மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் ஜெனரல் கமல் அமரசிங்க தெரிவித்துள்ளார்.

தென்னிலங்கை பத்திரிகை ஒன்றுக்கு கருத்த தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
எதிர்காலத்தில் அறிமுகப்படுத்தப்படவுள்ள “டிஜிட்டல் ஓட்டுநர் உரிமத்திற்கு” சர்வதேச அளவில் செல்லுபடியாகும் வகையில் “வியன்னா மாநாட்டில்” கையெழுத்திடுவது குறித்து விவாதங்கள் நடந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக வெளியுறவு அமைச்சகமும் போக்குவரத்து அமைச்சகமும் தொடர்புடைய நிறுவனங்களுடன் பல சுற்று கலந்துரையாடல்களை நடத்தியுள்ளதாகவும், தற்போது மேலும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் ஆணையாளர் தெரிவித்தார்.

“டிஜிட்டல் ஓட்டுநர் உரிமத்தை அறிமுகப்படுத்துவதன் மூலம், மிகக் குறுகிய காலத்தில் சர்வதேச மட்த்தில் செல்லுபடியாகும் வகையில் வழங்குவதற்கு தேவையான விதிகளை உருவாக்குதல், தொழில்நுட்ப வசதிகளை வழங்குதல் மற்றும் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துதல் உள்ளிட்ட அனைத்து தேவையான பணிகளையும் முடிக்க நடவடிக்கை எடுத்துள்ளோம்.

மேலும், போக்குவரத்து அமைச்சகம் இதற்கான செயல் திட்டத்தை தயாரித்து மோட்டார் வாகனத் துறைக்கு வழங்கியுள்ளதாகவும் அவர் கூறினார்.

நாடாளுமன்ற ஒப்புதலையும் பின்னர் அமைச்சரவை ஒப்புதலையும் பெற்று, வெளியுறவு அமைச்சகம், சட்டமா அதிபர், சட்ட வரைவுப் பிரிவு மற்றும் பிற தொடர்புடைய துறைகளிடமிருந்து ஒப்புதலைப் பெற்ற பிறகு, இதற்கான வியன்னா ஒப்பந்தம் கையெழுத்திடப்படும் என்றும், இதற்கு சிறிது காலம் எடுக்கும் என்றும் ஆணையர் ஜெனரல் மேலும் தெரிவித்தார்.