
இலங்கையின் இராணுவ அதிகாரிகள் மீதான பிரித்தானியாவின் தடை மனித உரிமைகள் பற்றியவை அல்ல
இலங்கையின் இராணுவ அதிகாரிகள் மீதான பிரித்தானியாவின் அண்மைய தடையானது, மனித உரிமைகள் பற்றியவை அல்ல எனவும் மாறாக விடுதலைப் புலிகளை ஆதரிப்பவர்களின் தொடர்ச்சியான அழுத்தத்தின் விளைவாக விதிக்கப்பட்டதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
தமது உத்தியோகபூர்வ எக்ஸ் தளத்தில் இதனைக் குறிப்பிட்டுள்ள அவர், இது நீதி அல்ல எனவும், சில மேற்கத்திய அரசியல்வாதிகள் பணத்தின் மூலம் செல்வாக்கு செலுத்தி சலுகைகளை அனுபவித்து வருகின்றனர் எனவும் அவர் பதிவிட்டுள்ளார்.
இதன் மூலம் இலங்கையின் நல்லிணக்கத்திற்கு ஆபத்து ஏற்படுவதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ சுட்டிக்காட்டியுள்ளார்.
நாம் இன்று அனுபவிக்கும் சுதந்திரம் கடுமையான முயற்சிகளால் பெறப்பட்டது என்பதை வடக்கு மற்றும் தெற்கு மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
இந்தத் தடைகள் இலங்கை படையினரின் போராடும் மனநிலையை சிதைக்கக்கூடும்.
இந்தத் தடைகளுக்குப் பின்னால் உள்ளவர்கள் தமிழ் சமூகத்தின் பாதுகாப்பைப் பற்றிக் கவலைப்படுவதில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார் சமூகங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தைச் சீர்குலைக்க எவருக்கும் ஒருபோதும் இடமளிக்கப்படாது.
சில சர்வதேச அரச சாரா நிறுவனங்கள் மூலம் சமூகங்களுக்கிடையில் பிளவுகளை உருவாக்க சலுகைகளை நாடும் சில தமிழ் அரசியல்வாதிகளின் நிகழ்ச்சி நிரலுக்கு தமிழ் சமூகம் இரையாக வேண்டாம் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ வலியுறுத்தியுள்ளார்.
அதேநேரம், இலங்கையில் அமைதியை ஏற்படுத்தியவர்களை அரசாங்கம் பாதுகாக்கிறதா? அல்லது வெளிநாட்டு சக்திகள் தாக்கும்போது அமைதியாக இருக்கிறதா? எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ கேள்வி எழுப்பியுள்ளார்.
இலங்கையின் உள்நாட்டு போரின்போது இடம்பெற்ற கடுமையான மனித உரிமை மீறல்கள் மற்றும் துஷ்பிரயோகங்களுக்கு பொறுப்புக்கூறும் 4 பேருக்கு எதிராக பிரித்தானியா தடை விதித்துள்ளது.
இதன்படி, பாதுகாப்புப் படைகளின் முன்னாள் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா, கடற்படை முன்னாள் தளபதி அட்மிரல் வசந்த கரன்னாகொட, முன்னாள் இராணுவத் தளபதி ஜகத் ஜயசூரிய மற்றும் முன்னாள் பிரதியமைச்சர் கருணா அம்மான் என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் ஆகியோருக்கு பிரித்தானியா இவ்வாறு தடை விதித்துள்ளது.
