இலங்கையின் அனர்த்தத் தயார்நிலை மற்றும் அவசரகாலப் பதிலளிப்பு நடவடிக்கைகளுக்கு தொடர்ந்து ஆதரவளிக்கத் தயாராக இருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை மீண்டும் உறுதியளித்துள்ளது. ஐ.நா. இலங்கைக்கான வதிவிட ஒருங்கிணைப்பாளர் Marc-André Franche, பாதுகாப்புச் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துயகொந்தாவை நேற்று (23) சந்தித்தபோது இது தொடர்பில் கலந்துரையாடியுள்ளார்.
சைக்ளோன் டிட்வா அனர்த்தத்துக்குப் பின்னரான அவசரகால நடவடிக்கைகள் மற்றும் ஆரம்பகால மீட்பு பணிகளுக்கான ஐ.நா. ஆதரவு, அத்துடன் எதிர்காலத்தில் இலங்கையின் அனர்த்தத் தயார்நிலை மற்றும் மீள்திறனை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்தும் இந்தச் சந்திப்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. தாக்கத்தை அடிப்படையாகக் கொண்ட முன்கூட்டிய எச்சரிக்கை முறைமைகள், நிறுவனங்களுக்கு இடையிலான ஒருங்கிணைப்பு, நிவாரணப் பொருட்களை சமமாக விநியோகித்தல் மற்றும் உள்ளூர் மட்டத்திலான அனர்த்தத் தயார்நிலை ஆகியவற்றை மேலும் வலுப்படுத்த வேண்டியதன் அவசியமும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எல் நினோ உள்ளிட்ட காலநிலை மாற்றங்களால் ஏற்படக்கூடிய எதிர்கால அபாயங்களுக்கும் இலங்கை தயாராக இருக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது. காலநிலை மற்றும் வானிலை சார்ந்த அனர்த்தங்களுக்கு எதிரான இலங்கையின் மீள்திறனை அதிகரிக்கும் நடவடிக்கைகளில், தேசிய நிறுவனங்களுடன் நெருக்கமாக இணைந்து தொடர்ந்து ஆதரவளிக்க ஐ.நா. தயாராக இருப்பதாகவும் Marc-André Franche தெரிவித்துள்ளார்.










