
இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுப்பு
மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையை அடுத்து, அங்குள்ள இலங்கைத் தூதரகங்களுடன் தொடர்ச்சியான தொடர்புகளைப் பேணி வருவதாக வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.
மத்திய கிழக்கில் தற்போது நிலவி வரும் போர் நெருக்கடி மற்றும் பாதுகாப்புச் சூழலைத் தொடர்ந்து, அங்குள்ள அனைத்து இலங்கைத் தூதரகங்கள் மற்றும் துணைத் தூதரகங்களுடன் வெளிநாட்டு அமைச்சு மிக நெருக்கமான தொடர்பில் இருந்து வருகின்றது.
தற்போதைய நிலவரப்படி, மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் வசிக்கும் இலங்கையர்களுக்கு இந்தப் போர்ச் சூழலால் பெரிய அளவில் பாதிப்புகள் எதுவும் ஏற்படவில்லை என வெளிவிவகார அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.
பிராந்தியத்தில் நிலவும் மாற்றங்களை அமைச்சின் உயர்மட்ட அதிகாரிகள் தொடர்ந்தும் உன்னிப்பாக கண்காணித்து வருவதுடன், அங்குள்ள இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
